பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும்: உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்!

கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2019 இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றி இப்போது 200 உலக நாடுகளில் பரவி விட்டது. இதற்கு எதிரான தடுப்பூசிகள் பல நாடுகளில் உருவாக்கப்பட்டு, அந்தந்த நாடுகளில் மக்களுக்கு போடப்படுவதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

தடுப்பூசி உற்பத்தி நாடுகள், பணக்கார நாடுகள் தங்கள் மக்களுக்கு 2 டோஸ் தடுப்பூசிபோட்ட பின்னர் பூஸ்டர் டோசும் போட்டுவிட விரும்புகின்றன. ஆனால் இன்னும் பல ஏழை நாடுகளில் பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசியின் ஒரு டோஸ்கூட போடப்படவில்லை.

இதன் காரணமாக குறைவான நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ள நாடுகளில் முதல் டோஸ் தடுப்பூசி 10 சதவீதத்தினருக்காவது கிடைப்பதை உறுதி செய்வதற்கு உதவும் வகையில், பூஸ்டர் டோஸ் போடும் திட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையொட்டி உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கூறுகையில், “ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்துவது, கொரோனா வைரஸ் பரவலைத்தடுப்பதில் பயன் தருமா என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை” என்று தெரிவித்தனர்.

வளர்ந்து வரும் நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு பணக்கார நாடுகள் அதிகமாக உதவ வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!