வடக்கு மாகாண சபையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ள நிலையில், மாகாண சபைக்கு அதிகாரப் பகிர்வும் அதிக அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.
இதில் இந்தியா முழுக்கரிசனையாக உள்ளது என்று இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தன்னைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கும்படி கேட்டிருந்தார் எனவும் மன் மோகன் கூறினார்.
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு புதுடில்லி திரும்பும் வழியில் விமானத்தில் வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் உங்களைச் சந்திப்பதற்கு விரும்பியதாகவும் நீங்கள் அந்தச் சந்திப்பைத் தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகின்றதே என இந்தியப் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர்.
இதற்குப் பதிலளித்த மன்மோகன் சிங், “இலங்கை ஜனாதிபதி என்னிடம் கடந்த மாதம் 24 ஆம் திகதிக்கும் 27 ஆம் திக திக்கும் இடையில் ஐ.நா. வரும் போது சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டிருந்தார்.
ஆனால் 27 ஆம் திகதி மாலையில் நான் நியூயோர்க் சென்றடைந்தேன். இதனால் அவரைச் சந்திக்க முடியவில்லை” என்று பதிலளித்தார். “வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வும் அதிக அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும் என்பதை இந்தியா, ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்திருக்கின்றது.
இப்போதும் அதையே வலியுறுத்துகின்றோம். இந்தியாவின் முழுமுனைப்பும் அதற் கானதாகவே இருக்கும்” என்றும் மன்மோகன் சிங் அங்கு கூறினார்.
















