யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஊழல்கள் அம்பலம் – ஒப்புக் கொண்டார் மேயர்

mejorஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை ஒப்புக் கொண்டுள்ளார்.

மாநகர சபை உறுப்பினர் விஜயகாந் மாநகர சபையின் ரூபா 19 லட்சத்தை மோசடி செய்ததாகவும், கொலை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதோடு யாழ்.மாநகர சபையிலும் நிர்வாக மோசடிகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் காசோலைகள் மோசடி செய்ததோடு பலரிடம் கப்பம் கோரியும் வந்துள்ளது தொடர்பாக ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என தெரிவித்தார்.

மேலும் மாநகர சபை ஊழியர்களின் உண்ணாவிரதம் தொடர்பாக கருத்து தெரிவித்த மேயர்,

எமக்கு வழங்கப்பட்ட ஆளணிகளுக்கு அமைவாகவே நாம் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியும் அதற்கு மேலதிகமாக நாம் நியமனம் வழங்க முடியாது.

இவ்வளவு காலமாக தற்காலிகமாக பணியாற்றி வந்த ஊழியர்களில் ஆளணி தேவைக்கு அமைவாக நிரந்தர நியமனம் வழங்கவுள்ளோம். அவர்களை நாம் நேர்முக தேர்வின்னூடாகவே தெரிவு செய்ய முடியும். பல வருடங்களாக தற்காலிகமாக பணியாற்றி வந்தவர்களுக்கு நிரந்த நியமனம் வழங்காதது அப்போது இருந்த ஆணையாளர்கள் விட்ட தவறே. அதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அப்போது இருந்த ஆணையாளர்கள் அந்த இளைஞர்களை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தி உள்ளனர்.

அதேபோல தற்போது எமது சபையின் சுகாதார குழு தலைவரான சுதர்சிங் விஜயகாந்த் பல ஊழியர்களிடம் நிரந்தரம் ஆக்குகின்றேன் என கூறி பணம் பெற்றுள்ளதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளன.

அவ்வாறு அவரிடம் பணம் கொடுத்தவர்களே உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி கொண்டு இருக்கின்றனர். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதுடன் ஊழியர்களிடம் பணம் பெற்றது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார்.

Tags: , ,

Leave a Reply