தலைவர் பிரபாவின் வீடு நேற்று தகர்ப்பு

pirabakaran-houseவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாக நம்பப்படும் புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியிலுள்ள நிலக் கீழ் மாடிகளைக் கொண்ட வீடு நேற்று மாலை படையினரால் தகர்க்கப்பட்டுள்ளது.

அந்த பதுங்குழி வீட்டை தகர்ப்பதற்கு முன்னர் அதனைச் சுற்றியிருந்த மக்களை படையினர் வெளியேற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு தகவல் வழங்கி அவர்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி விட்டு புலிகளின் தலைவர் பிரபாகரனின் பதுங்குகுழி தகர்க்கப்பட்டது என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் நேற்றிரவு “உதயன்’ பத்திரிகையிடம் தெரிவித்தனர்.

எனினும் இது குறித்து தமக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது:

புலிகளின் கட்டுப்பாட்டில் வன்னி இருந்த போது புலிகளின் தலைவர் பிரபாகரனின் இருப்பிடமாக இந்த வீடே பயன்படுத்தப்பட்டது என்று படையினர் கூறிவந்தனர். இந்த வீடு நிலத்துக்குக் கீழே மூன்று மாடிகளையும் சுரங்க வழிகளையும் கொண்டதாக மிகவும் பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டிருந்தது.

இறுதிப் போரின் போது இதனைக் கைப்பற்றிய படையினர் பின்னர் பொதுமக்கள் இந்த வீட்டைப் பார்வையிட அனுமதித்திருந்தனர். இதனால் பெருமளவிலான தமிழ், சிங்கள சுற்றுலா பயணிகளும் வெளிநாட்டவர்களும் இந்த வீட்டைப் பார்வையிட்டதோடு புலிகளின் தொழில் நுட்பங்களைப் பார்த்து வியந்து வந்தனர்.

கடந்த ஒரு வாரமாக சுற்றுலாப் பயணிகள் இந்த வீட்டைப் பார்வையிட படையினர் அனுமதி மறுத்திருந்தனர். வீட்டை பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வேணாவில் பகுதிக்கு வந்த படையினர் அந்தப் பகுதியில் வெடிகுண்டு ஒன்றை தாங்கள் கண்டு பிடித்திருப்பதாகவும் அதனைச் செயலிழக்கச் செய்ய இருப்பதால் பொதுமக்களை பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுமாறும் உத்தரவிட்டனர். இதனால் மக்கள் பதறி அடித்துக்கொண்டு பாதுகாப் பான இடங்களை நோக்கி விரைந்தனர்.

மாலை 6.40 மணியளவில் பிரபாகரனின் வீடு இருந்த இடத்தில் பெரும் வெடிச் சத்தம் ஒன்று கேட்டது. அதனைத் தொடர்ந்து புகை மூட்டம் வானை நோக்கி எழுந்தது.

“சில நாள்களுக்கு முன்னர் தலைவரின் வீட்டை இடிக்கப் போகிறோம்” என்று படையினர் பொதுமக்களுக்கு கூறி வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இதனை திட்டமிட்டபடி வெடிகுண்டை மீட்டதாக மக்களை திசை திருப்பிவிட்டு பிரபாகரனின் வீட்டை படையினர் அதி சக்திவாய்ந்த வெடிகுண்டு மூலம் தகர்த்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சத்தத்தால் புதுக்குடியிருப்புப் பகுதியே அதிர்ந்ததாகவும், நேற்று இரவுவரை வேணாவில் பகுதி மக்கள் சொந்த இடங்களுக்குச் செல்லாமல் பாடசாலைகளிலும் கோயில்களிலும் தங்கியிருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் வெடி பொருள்கள் அகற்றும் பணியில் ஈடுபட்ட நிறுவனத்தினர், அங்கு எந்த விதமான வெடிபொருளும் இருக்கவில்லை. மீட்டவற்றை அங்கிருந்து எப்போதோ அப்புறப்படுத்திவிட்டோம் என்று உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தனர்.

விசுவமடுப் பகுதியில் இருந்த புலிகளின் பதுங்கு குழி ஒன்றும் நேற்று அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆயினும் இது குறித்து உறுதிப்படுத்த முடியவில்லை. இது பற்றி தனக்கு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றார் இராணுவப் பேச்சாளர்.

Tags: , ,

Leave a Reply