மிஸ் டீன் கனடா குளோப் (Miss Teen Canada Globe) அழகுராணியாக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அபிஷேகா லொய்ட்ஸன் தெரிவாகியுள்ளார்.
பதின்மர் பருவத்தினருக்கான மிஸ் டீன் கனடா 2013/14 போட்டிகள் கனடாவின் ஒன்டாரியோவில் அண்மையில் நடைபெற்றன. இதில் மிஸ் டீன் கனடா குளோப் அழகுராணியாக அபிஷகா லொய்ட்ஸன் தெரிவானார்.
இவர் கனடாவில் பிறந்தவர். எனினும் இவரின் பெற்றோர் இலங்கை, வவுனியாவைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
17 வயதான அபிஷேகா, கனடாவில் மர்க்காம் நகரிலுள்ள சகோ. அன்ட்ரே கத்தோலிக்க உயர் பாடசாலையின் மாணவியாவார். மொடலிங், கர்நாடக சங்கீதம், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றில் திறமையானவராக அபிஷேகா விளங்குகிறார்.
இவர் ஏற்கெனவே கனடாவில் பல தெற்காசிய அழகுராணி போட்டிகளில் பங்குபற்றியுள்ளார். 2013 மிஸ் தெற்காசிய அழகுராணி போட்டியில் பங்குபற்றிய அவர் ஆசிய அழகிகள் 2013 அழகுராணி போட்டியில் இரண்டாமிடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மிஸ் டீன் ஒன்டாரியோ குளோப் 2013 அழகுராணியாகத் தெரிவான பின் கனேடிய தேசிய ரீதியிலான மிஸ் டீன் கனடா குளொப் 2013 அழகுராணி போட்டியில் இவர் பங்குபற்றினார்.
கடந்த வருடம் இலங்கைக்கு வந்த அவர் வவுனியாவில் தனது தாயாரின் பாடசாலைக்கும் சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு விஞ்ஞானம், கணித பாடங்களையும் கற்பித்தார். தனக்கு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் அங்கு செல்ல விரும்புவதாக அபிஷேகா லொய்ட்ஸன் கூறியுள்ளார்.
















