மணல் ஏற்றுவதற்காக டிராக்டரைச் செலுத்திச் சென்ற இளைஞர் மறுநாள் காலை யாரும் இல்லாத இடத்தில் டிராக்டர் சில்லு நெஞ்சில் ஏறியபடி சடலமாகக் கிடக்கக் காணப்பட்டார். டிராக்டர் சில்லு அவரது தலையுடன் முட்டியவாறு நெஞ்சின் மேல் ஏறியிருந்தது.
இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் அது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமராட்சி கிழக்கு முள்ளியான் போக்கறுப்புப் பகுதியில் யாருமில்லாத வெளி ஒன்றிலேயே அவர் சடலமாகக் காணப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த செல்வராஜசிங்கம் கயந்தன் (வயது ‡25) என்பவரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மணல் ஏற்றுவதற்காக போக்கறுப்பு பகுதியிலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் தனது டிராக்டரில் இவர் புறப்பட்டுள்ளார்.
மருதங்கேணிக்குச் சென்று அங்குள்ள டிராக்டரின் பெட்டியைப் பொருத்திக்கொண்டே மணல் ஏற்றுவதற்கு செல்வதாகக் கூறியுள்ளார். அதன்படி மருதங்கேணிக்குப் புறப்பட்டுள்ளார்.
அவ்வாறு சென்ற இளைஞர் நேற்றுமுன்தினம் இரவாகியும் வீடுதிரும்பவில்லை. இதனால் அவரது மனைவியின் தந்தையார் அவரைத் தேடி நேற்று அதிகாலை 4 மணிளவில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இதன்போதே யாருமற்ற இடத்தில் டிராக்டரின் பின் சில்லு அவரின் நெஞ்சை நசித்த வண்ணம் அவர் சடலமாகக் காணப்பட்டார்.
இதன் பின்னர் சம்பவம் தொடர்பில் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக பளைப் பொலிஸார் கூறினர். சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணை மேற்கொண்ட பின்னர் சடலத்தை மீட்டனர். பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் இது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் மேலும் கூறினார்.
















