விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும்: இந்தியாவில் உள்ள இலங்கை மூதாட்டி

oldwomenஇலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்று வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சி.வி. விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும். எம் மக்களுக்கு தனி சுதந்திரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இனியும் எம் மக்கள் எங்களைப் போல் அகதிகளாக செல்லக் கூடாது என ஈழத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு நீதி நாள் என்பதால் அதிகமான கூட்டம் இருந்தது. அந்த நேரத்தில் 75 வயதுடைய ஒரு மூதாட்டி கையில் ஒரு துணி பையுடன் வந்தார். முதியோர் உதவித் தொகை கேட்டு வந்துள்ளார் என்று அனைவரும் நின்ற நிலையில் திடீரென தன் கை பையில் இருந்து ஒரு இந்திய தேசிய கொடியை எடுத்து உயர்த்திப் பிடித்துக் கொண்டபடி இந்திய வாழ்க… இலங்கையில் தமிழினம் வாழ்க… என்று கோஷம் போட்டார்.

தொடர்ந்து தன் கை பையில் வைத்திரந்த சரவெடிகளை எடுத்து வைத்து வெடிக்க செய்தார்.

ஏன் இந்த கொண்டாட்டம் என்று அந்த மூதாட்டியிடம் கேட்டால்… நான் ஈழத்து பெண். என் பேரு காசியம்மாள். அகதியாக இந்தியா வந்தேன் என்னை தோப்புக் கொல்லை முகாமில் தங்க வைத்தார்கள். என்னைப் போலவே என் தமிழின மக்கள் அகதிகளாக இங்கு மட்டுமல்லாமல் உலக நாடுகள் எங்கும் போகிறார்கள். இன்று அவர்களை ஆள தமிழன் முதலமைச்சராக பொருப்பு ஏற்கிறார். அந்த விக்னேஸ்வரன் நல்லாட்சி செய்து எம் மக்களை காக்க வேண்டும். எம் மக்களுக்கு தனி சுதந்திரம் பெற்றுக் கொடுக்க வேண்டும். இனியும் எம் மக்கள் எங்களைப் போல அகதிகளாக செல்லக் கூடாது.

அதற்காகத் தான் பதவி ஏற்பு நாளில் பட்டாசு வெடித்து இந்திய தேசிய கொடியுடன் வந்தேன். இந்தியா எம் மக்கள் வாழ உதவ வேண்டும். அதற்காககத் தான் இந்திய தேசிய கொடியை உயர்த்தினேன் என்றார் காசியம்மாள் என்ற அந்த ஈழத்து மூதாட்டி.

Tags: , ,

Leave a Reply