கப்பல் மூலம் 500 அகதிகளை கனடாவுக்கு கடத்திச் சென்றதாக கூறப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
CTV நிறுவன ஆவண செய்தியில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு கடத்தப்பட்டதன் பின் எவ்வித குற்றச்சாட்டுக்களும் இன்றி சுமார் ஒரு வருடகாலம் தான் சிறை வைக்கப்பட்டிருந்ததாக சத்தி எனப்படும் சத்தியபவன் ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார்.
பிளாஸ்டிக் பைப்புகள் மூலம் தாக்கப்பட்டு உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் தவித்ததாக பாதிக்கப்பட்ட சத்தியபவன் ஆசீர்வாதம் தனது கனேடிய சட்டத்தரணியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
“என் உடலில் தண்ணீர் தாகம் ஏற்பட்டு நான் தண்ணீர் கேட்டபோது அவர்கள் என்னை அடித்தனர்” என சத்தி தெரிவித்துள்ளார்.
“எனது கண்ணை கட்டி கைகளையும் கட்டி போட்டனர். நிர்வாணமாக்கப்பட்டேன். குளிர்ந்த, இருண்ட அறையில் அடைக்கப்பட்டேன். அந்த நாட்களை என்னால் எண்ண முடியவில்லை.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் சத்தி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற விபத்தொன்றில் உயிரிழந்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
2010ம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் சன் சீ கப்பலில் 500 அகதிகள் கனடாவை சென்றடைந்தனர்.
இவர்களை நாடு கடத்திய குற்றச்சாட்டில் சத்தி கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னரே இலங்கை சிறையில் வைத்து சத்தியபவன் ஆசீர்வாதம் மீது சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















