வடமாகாண சபையின் முதலமைச்சருக்கான சத்தியப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுவிட்டது.
ஒரு நல்லிணக்க சமிக்ஞையாகவே முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் ஜனாதிபதி சார்பில் அப்படியானெதாரு நல்லிணக்கம் எதுவும் வெளியிடப்பட்டதாக எவ்வித தகவலும் இல்லை. குறிப்பாக மத்திய அரசுக்கும் வடமாகாண சபைக்கும் எதிர்காலத்தில் நிலவ வேண்டிய உறவுகள் தொடர்பாகவோ அவற்றைக் கையாள்வது தொடர்பாகவோ கூட எதுவுமே தெரிவிக்கவில்லை.
இந்தப் பதவிப் பிரமாணம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு விதமான கருத்துகள் வெளியிடப்பட்டு பெரும் சர்ச்சைகள் நிலவின. ஏற்கனவே விக்னேஸ்வரன் கூட முதலமைச்சருக்கான நியமனக் கடிதத்தை ஆளுநரிடம் பெறச் சென்றபோது அவர் வெளியிட்ட சில கருத்துக்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை.
தன்னிடமோ ஜனாதிபதியிடமோ பதவிப் பிரமாணம் பெறாமல் நியமனக் கடிதத்தை வழங்க முடியாது என ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி மறுத்தபோது விக்னேஸ்வரன் சில சட்டவிளக்கங்களை அவருக்குக் கொடுத்திருந்தார். அதன் பின்பு சத்தியப்பிரமாணம் செய்யாமலே முதலமைச்சருக்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பலரும் முதலமைச்சர் ஜனாதிபதி முன்போ ஆளுநர் முன்போ சத்தி யப்பிரமாணம் செய்யமாட்டார்கள் என உறுதியாகத் தெரிவித்து வந்தனர். தமிழ் மக்களும் அதை விரும்பினர்.
பெரும் இனப்படுகொலையை நடத்தி எமது ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்தது மட்டுமன்றி தொடர்ந்து இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன் வடக்கின் முதலமைச்சராக ஒரு இலட்சத்துக்கு அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று மக்களின் பேராதரவைப் பெற்ற விக்கினேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்வதை எமது மக்கள் விரும்பவில்லை.
அதற்கான சட்ட வழிமுறைகளும் இருந்த காரணத்தால் அந்த நோக்கம் மேலும் உறுதியாகியது. பெரும்பான்மையானோரின் கருத்துக்கள் இப்படியிருந்தபோதும் மாற்றுக் கருத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கத்தான் செய்தது. இப்படியான நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை மேற்கொண்டார்.
அடுத்த நாள் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டத்தில் பெரும்பான்மையோரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது சம்பந்தன் ஜனாதிபதி முன்பே சத்தியப்பிரமாணம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
எல்லாவிதமான எதிர்ப்புகளும் புறந்தள்ளப்பட்டன. சில சிரேஷ்ட உறுப்பினர்கள் கூட்டத்தை விட்டே வெளியேறினர். எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச – சம்பந்தன் எடுத்த முடிவு கடந்த ஏழாம் திகதி அரங்கேற்றப்பட்டு பதவியேற்பும் நிறைவேற்றம் அடைந்தது.
ஒரு பதவியேற்பின் போது சத்தியப் பிரமாணம் செய்வது ஒரு சம்பவம். எவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தாலும் சொல்லப்படுவது ஒரே வார்த்தைகள்தான். எனவே மேலோட்டமாகப் பார்க்கும்போது அது பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும் எனச் சொல்லிவிட முடியாது.
ஆனால் இம்முடிவு தொடர்பாக ஜீரணிக்க முடியாத இரு முக்கிய விடயங்கள் உள்ளன. இப்படியான நிலை தொடருமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தைத் தக்கவைக்க முடியுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது.
இம்முடிவு எடுக்கப்படும் போது பெரும்பான்மையோரின் கருத்துக்களோ, மக்களின் விருப்பமோ கருத்தில் எடுக்கப்படவில்லை. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.
குறிப்பாகச் சில சிரேஷ்ட உறுப்பினர்களின் கருத்துக்கள் கூட அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. இது எதிர்காலத்தில் வடமாகாண சபையின் தலைமை தான்தோன்றித்தனமான போக்கைக் கடைப்பிடிக்கப் போகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
வேட்பாளர் தெரிவு, அமைச்சர்கள் நியமனம் போன்ற வற்றில் முடிவு எடுக்க முடியாமல் இழுபறிப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்பிரச்சினையில் மட்டும் எப்படித் திடீர் முடிவை எடுத்தது.
இப்படியான போக்கு எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மத்தியில் சர்ச்சை களை ஏற்படுத்துவதுடன் தலைமை தனிமைப்படுத்தப்பட்டு புறமொதுக்கப்படும் நிலையையும் ஏற்படுத்தலாம்.
தமிழ் மக்கள் ஐக்கியத்துடன் ஒரே கருத்துடன் நின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பிரமாண்டமான வெற்றியை வழங்கியமைக்காக தன்னின மக்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடன் இதுவாக இருக்க முடியுமா?
அடுத்து சத்தியப்பிரமாணம் ஜனாதிபதியின் முன்னிலையில் மேற்கொள்ளப்படுவதற்கு சொல்லப்பட்ட இரு காரணங்கள். ஒன்று நல்லெண்ண நடவடிக்கை. இரண்டாவது வெளிநாட்டுத் தூதர்கள் கேட்டுக் கொண்டமை.
அரசுக்கும் தமிழ் மக்களுக்குமிடையே ஒரு நல்லிணக்கம் உருவாவதை எவருமே மறுக்கப் போவதில்லை. ஆனால் அது எப்படியான நல்லிணக்கமாக இருக்க வேண்டும் என்பதே இன்று எழும் கேள்வி.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒருவித நல்லிணக்கத்தைப் பேணி வருகிறார் அது அரசு தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் அவற்றுக்குத் துணைபோவ தற்குமான நல்லிணக்கம். வடமாகாண சபைத் தேர்தலில் மக்கள் அவரின் நல்லிணக்கத்தைப் பூரணமாகவே நிராகரித்துவிட்டனர்.
நல்லிணக்க சமிக்ஞை என்பது இரு தரப்பிலிருந்தும் வர வேண்டும். பதவியேற்றபின் பின்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், முதலமைச்சர் அரசுடன் ஒத்துழைத்து எமது மக்களின் பிரச்சினைகளை அணுகத் தயார் என்று தெரிவித்த பின்பும் கூட ஜனாதிபதி அதற்கான ஆக்கபூர்வமான பதில் எதனையும் வழங்கவில்லை.
மாறாக ஜனாதிபதி இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு நாடாளுமன்றமே சிறந்த இடம் எனவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் எடுக்கப்படும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வே ஒரே வழி எனவும் பழைய பல்லவியையே திரும்பவும் பாடியுள்ளார்.
இதுவே இப்போதைக்கு ஜனாதிபதி காட்டிய நல்லிணக்க சமிக்ஞையாகும். எனவே இப்படியான நிலையில் இந்தச் சத்தியப்பிரமாணம் எப்படி ஒரு நல்லிணக்கத்துக்கான ஆரம்பமாக இருக்க முடியும்?
அடுத்தது வெளிநாட்டுத் தூதர்கள் கேட்டுக் கொண்டமைக்காகவே மேற்படி முடிவு எடுக்கப்பட்டது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.
இது நிச்சயமாகத் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத பெரும் ஆபத்தான கருத்தாகும்.
இது தமிழ் மக்களின் சுயத்தையே கேள்விக்குள்ளாக்கும் கருத்தாகும். கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஒரு தேர்தல் விஞ்ஞாபனம் தமிழ் மக்களின் முன்வைக்கப்பட்டது.
அதை ஏற்றுக் கொண்டே மிகப் பெரும்பான்மை வாக்குகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆணை வழங்கினர். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வழிநடத்த வேண்டியது அந்தத் தேர்தல் விஞ்ஞாபனமேயொழிய வெளிநாட்டுத் தூதுவர்களல்ல.
அதற்காக வெளிநாடுகளை நிராகரிக்கும்படி நாம் கோரவில்லை. அவர்களின் ஒத்துழைப்பின்றி நாம் எதுவும் செய்துவிட முடியும் என நம்பவும் இல்லை. எம்மிடம் நியாயம் உண்டு. தர்மம் உண்டு. எமக்கு இழைக்கப்படும் அநீதிகளை அனைவருமே ஏற்றுக் கொள்கின்றனர்.
எனவே எமது நிலைப்பாட்டை அவர்களுக்கு நாம் தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் எமக்காகக் கொடுத்து வரும் குரலை மேலும் வலுப்படுத்த வேண்டும். அவர்கள் கேட்கிறார்கள் என்பதற்காக அவர்கள் எமக்கு ஆதரவு வழங்க நிலவும் சாதகமான நிலைமைகளைப் பலவீனப்படுத்திவிடக்கூடாது.
எனவே வெளிநாட்டுத் தூதர்கள் கேட்டுக் கொண்டார்கள் எனக் கூறிக் கொண்டு வெளிநாடுகள் இலங்கை அரசுக்குக் கொடுக்கும் அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் காரியங்களில் நாம் இறங்கிவிட முடியாது.
எனவே ஜனாதிபதியின் முன்பு பதவியேற்பின் போது சத்தியப் பிரமாணம் செய்வதில் உள்ள சரி, பிழைகளை விட அந்த முடிவு எடுக்கப்பட்ட முறையும் அதற்காகக் கூறப்பட்ட காரணங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை.
இதேவிதமான தடம்புரளல்களோடுதான் முதலமைச்சரின் பதவி வகிப்பும் தொடரப் போகிறதோ என்ற அச்சத்தைத் தமிழ் மக்கள் மத்தியில் தோற்றுவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனக்கு அழுத்தங்கள் விடுக்கப்படும்போது பேச்சுக்களை ஆரம்பித்தோ நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்தோ பிரதம நீதியரசரை நீக்கியோ ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தோ அவற்றைத் நீர்த்துப் போக வைப்பதில் வல்லவர்.
அதே அடிப்படையிலேயே வடமாகாண சபைத் தேர்தலை நடத்தியுள்ளார். அவர் தனது தமிழ் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அழுத்தங்களிலிருந்து தப்ப வடமாகாண சபையின் தலைமையைப் பயன்படுத்த முனைவார் என்பதில் சந்தேகமில்லை.
இப்படியான சூழலில் வடமாகாண சபை தமிழ்மக்களுக்கு சாதகமாகச் செயற்படுவது கடினமாகவே இருக்கும். எனவே முதலமைச்சர் தனது பதவி வகிப்பை உறுதியுடனும் நிதானத்துடனும் கையாளவேண்டும்.
ஆனால் பதவியேற்பு தொடர்பாக முடிவு எடுக்கப்பட்ட விதமும் அதற்குக் கூறப்பட்ட காரணங்களும் நம்பிக்கையூட்டும் விதத்தில் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
எனவே முதலமைச்சர் தனது பதவி, சட்டஅறிவு, நிர்வாகத் திறன் என்பதை சோரம்போக விடாமல் மிகவும் எச்சரிக்கையுடனும் தீர்க்க தரிசனத்துடனும் மேற்கொள்ள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆணையாகும்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரப் பரவலாக்கம் என்ற இலக்கை நோக்கி உறுதியாக அவரின் பதவி வகிப்பு நகர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்புமாகும்.
















