சீனா அரசானது அந்நாட்டில் இணையச் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு சுமார் 20 இலட்சம் பேரை பணிக்கமர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இத்தகவலை அந்நாட்டு ஊடகமொன்றே வெளியிட்டுள்ளது.
சீனாவில் பல கோடிக்கணக்கான இணைய பாவனையாளர்கள் உள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அரசுக்கு எதிரான கருத்துக்களை மைக்ரோ புளக்கள் ஊடாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்நாட்டு அரசுக்கு இது நீண்டகாலமாக தலையிடியாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் சீன அதிகாரிகள் குறிப்பாக சமூகதளங்களை குறிவைத்து செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூகதளங்கள் ஊடான அரச எதிர்ப்பு தகவல்களை தணிக்கை செய்வதில் சீன அரசு மும்முரமாக உள்ளது.
எனினும் இவ்வாறு பணிக்கமர்த்தப்பட்டுள்ளோர் கருத்துக்களை இணையத்தில் இருந்து அழிப்பதில்லை எனவும் மாறாக அவற்றைக் கொண்டு அறிக்கை தயாரித்து ஆட்சியாளர்களுக்கு வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இணையத்தை கண்காணிப்போருக்கு விசேட பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
சீனாவில் இணையத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடு நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
















