நாமக்கல் – திருச்சி மாவட்ட எல்லையில் பவித்திரம் அருகே உள்ளது வெள்ளாளப்பட்டி கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அச்சப்பன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் குரும்பர் இனமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இங்கு ஆண்டு தோறும் விஜயதசமியை முன்னிட்டு சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் வினோத நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் நேற்று அச்சப்பன் கோவில் திருவிழா தொடங்கியது.
விழாவின் தொடக்கமாக பக்தர்கள் சுற்று பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சுவாமியை அலங்கரித்து, காட்டு கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் முன்பு பக்தர்கள், குரும்பர்களின் பாரம்பரிய ஆட்டமான தப்பாட்டம், கோலாட்டம் ஆடியபடி சென்றனர். அதனை தொடர்ந்து சாட்டையால் அடித்து பேய் ஓட்டும் நிகழ்ச்சி தொடங்கியது.
காட்டு கோவில் முன்பு வரிசையாக பெண்களும், ஆண்களும் தரையில் மண்டியிட்டு, கைகளை உயர்த்தியபடி இருந்தனர்.
தலைமை பூசாரி மண்டியிட்டு, நின்ற பெண்களின் கைகளில் சாட்டையால் ஓங்கி அடித்து, பேய் ஓட்டும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பெரும்பாலான பெண்கள் ஒரே அடியில் கைகளை உதறியபடி எழுந்து விட்டனர். சில பெண்கள் 4, 5 அடி வரை வாங்கி கொண்டு அப்படியே நின்றது மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த நிகழ்ச்சியில் பவித்திரம், தாத்தையங்கார் பேட்டை, முசிறி, எருமப்பட்டி, வரகூர் பகுதிகளை சேர்ந்த ஏறத்தாழ ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு சாட்டையடி வாங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி வாண வேடிக்கையும் நடந்தது. பேய் ஓட்டும் நிகழ்ச்சி தொடங்கும் முன்பு பூசாரியின் தலையில் அடித்து தேங்காய் ஒன்று உடைக்கப்பட்டது.
















