பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பதனை, இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங், தவிர்க்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியும், கூட்டணி கட்சியான திராவிட முன்னேற்றக்கழகமும் அமர்வுகளை பகிஸ்கரிக்க வேண்டுமென கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் ஏனைய கட்சிகளும் அமர்வுகளில் பிரதமர் பங்கேற்கக் கூடாது என கோரிக்கை விடுத்துள்ளன.
இவ்வாறான ஓர் பின்னணியில் பிரதமர் மன்மோகன் சிங் அமர்வுகளில் பங்கேற்பதனை தவிர்க்கக் கூடும் என இந்திய ஊடகங்கள் ஊகம் வெளியிட்டுள்ளன. இலங்கையில் நடைபெறவுள்ள அமர்வுகளில் துணை ஜனாதிபதி ஹமீட் அன்சாரியும், வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தும் பங்கேற்கக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
அமர்வுகளில் பிரதமர் பங்குபற்றக் கூடாது என தமிழக கட்சிகள் பல்வேறு வழிகளில் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றன. எதிர்வரும் ஆண்டில் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசாங்கக் கூட்டணி மிகவும் நிதானமாக தீர்மானத்தை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2011ம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் இந்திய பிரதமர் பங்கேற்கவில்லை, அவுஸ்திரேலியாவில் நடைபெ;றற இந்த அமர்வில் துணை ஜனாதிபதி அன்சாரியே பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
















