போரில் அடிபட்ட வடக்குக்கு வேண்டும் பன் மடங்கு நிதி; ஏனைய மாகாணங்களுடன் எம்மை ஒப்பிட வேண்டாம் என்கிறார் முதல்வர்

vikneswaran5“இலங்கையில் ஏனைய ஏழு மாகாணங்களுடன் வடக்கு – கிழக்கு மாகாணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது தவறு. போரினால் அடிபட்டு – இடிபட்டு அல்லலுற்று வந்திருக்கும் எமது மக்களுக்கு ஏனைய மாகாணங்களுக்கு ஒதுக்கப்படும் நிதித் தொகையிலும் பார்க்க பன் மடங்கு அதிகமாக ஒதுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

உள்ளூராட்சி மகாண சபைகள் அமைச்சினால், வடக்கு மாகாண சபை உறுப்பினர் களுக்கான அறிமுகச் செயலமர்வு யாழ்.ரில்கோ விடுதியில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்றது.

இதில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

1987ஆம் ஆண்டு மாகாண சபை உருவாக்கப்பட்டபோது, வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்குச் சேர்த்தே ஒரு மாகாண சபை வகுக்கப்பட்டது. இதிலிருந்தே தமிழ் பேசும் மக்கள் வாழ்ந்த இடங்களுக்கு அதிகாரப் பகிர்தல் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவாகின்றது.

எங்கள் நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக வாழும் இடங்களில் அதிகாரங்களைப் பகிர வேண்டிய தேவை மிகக் குறைவானது. ஏனெனில் மத்திய அரசின் பெரும்பான்மையினரும், வடக்கு – கிழக்கு தவிர்ந்த ஏனைய 7 மாகாணங்களில் வாழும் பெரும்பான்மையான மக்களும் ஒரே மொழி பேசுபவர்கள். ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் பிரச்சினைகளும் ஒரே மாதிரியானவை.

ஆனால் மலையகம் வாழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியமாகலாம். வடக்கு – கிழக்கு மாகாணங்கள் வேறுபட்டவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் வடக்கு – கிழக்கு மாகாணத்தை மட்டும் எடுத்துப் பார்த்தால், ஏனைய 7 மாகாணங்களிலிருந்தும் வேறுபட்டுள்ளோம்.

எங்கள் மொழிவேறு, எமது மதங்கள் வேறு, எமது நிலங்கள் வேறுவிதமானவை. எமது கலாசாரம் வேறுபட்டது. எமது வாழ்க்கை முறை வேறுபட்டது.

இதனைவிட முக்கியமானது, நாங்கள் போரின் போது அடிபட்டு, இடிபட்டு அல்லலுற்ற ஒரு மாகாணம். எம்மை ஏனைய மாகாண மக்களுக்குச் சமமாக வாழ வைப்பதானால் அதற்கான செலவுகள் மற்றைய மாகாணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் நிதித் தொகையிலும் பார்க்கப் பன்மடங்காக உயர வேண்டும்.

மத்திய அரசு, போரினால் பாதிக் கப்பட்டுப் பலவிதத அவலங்களுக்கு உள்ளாகியுள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எமது வடக்கு மாகாண சபைக்கு போதுமான நிதி உதவிகளை ஒதுக்குவது உசிதமானது.

அதிகாரப் பரவலின் அடிப்படைகளை மறந்துவிட்டு மத்திய அரசு தன்னை முதன்மைப்படுத்தி, மத்திய அரசுக்கு அனுசரணையாகவே மாகாண சபைகள் இயங்க வேண்டும் என்று கூறுவதை நான் அவதானித்துள்ளேன்.

அதிகாரப் பகிர்வானது மத்திய அரசைப் பலப்படுத்தவோ, அதனை முதன்மைப் படுத்தவோ, வகுக்கப்பட்ட உபாயமல்ல. மத்திய அரசு, வலிமை குறைந்த மாகாண மக்களை எழுப்பித் தமது கால்களில் அவர்களை நிற்கவைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே மேற்படி உபாயம் வகுக்கப்பட்டது.

எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசு அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர, மத்திய அரசுக்கு முண்டுகொடுக்க மாகாண சபைகள் முன்வர வேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப் பரவலின் தாற்பரியத்தை மத்திய அரசு அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வலியுறுத்தும்.

எமது வடக்கு மாகாணம் போரின் பின்னர் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ளது. அதனைக் கட்டியயழுப்புவது நாட்டின் தலையாய கடனாகும். அதனை ஈடு செய்யும் விதத்தில் மத்திய அரசு நடந்துகொள்ள வேண்டும் – என்றார்.

Tags: , ,

Leave a Reply