சிங்கள – பெளத்த மக்களை உசுப்பிவிட்ட, சிங்கள தீவிரவாதிகள் “கஸினோ’ தொடர்பில் சிங்கள மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
அப்பாவித் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக பாவம் செய்தவர்கள், இன்று தங்கள் சொந்த இன மக்களுக்குப் பதில் சொல்ல முடியாமல் விழி பிதுங்கிப் போய் நிற்கின்றார்கள்.
எங்களுக்கு எதிராக இவர்கள் செய்த பாவங்களுக்கு இவர்களே பதில் சொல்லும் நாள் அண்மித்துக் கொண்டிருப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பெளத்த விகாரைகளில் ஒலிக்கும் சாது சாது என்று உச்சாடனம் செய்து, பெளத்த மதத்தை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்த இந்த அரசு இன்று சூது சூது என்ற சர்வதேச கஸினோ மன்னன் ஜேம்ஸ் பெக்கரின் மந்திரத்தை வேதவாக்காக ஓதுகின்றது.
கொல்லப்படுவது தமிழர்கள் தானே என்றும் அடிபடுவது முஸ்லிம் தானே என்றும் இந்த அலங்கோல அரசின் அனைத்து அட்டகாசங்களுக்கும் துணையாக சிங்கள – பெளத்த மக்களை உசுப்பிவிட்டு அழைத்துச் சென்று படு பாதக பாவச் செயல்களை, சம்பிக்க ரணவக்கவின் ஜாதிக யஹல உறுமய, விமல் விரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, தினேஷ் குணவர்த்தனவின் மஹஜன எக்சத் பெரமுனை, குணதாச அமரசேகரவின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், பொதுபலசேனா, ராவணபலய ஆகிய அமைப்புக்களே செய்தனர்.
கஸினோ கலாசாரத்துக்கு எதிராக இன்று நாட்டில் எழுந்துவிட்ட பாரிய எதிர்ப்பை கண்டு அரசு தற்காலிகமாக பின்வாங்கிய நிலையில், மக்களை உசுப்பிவிட்ட இந்த அரசியல்வாதிகள் மக்களின் கேள்விகளுக்கு இன்று பதில் சொல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
மேலும் நாட்டை விற்று வயிறு கழுவ வேண்டிய அளவுக்கு நாட்டின் நிதி நிலைமை பாரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
















