இறந்த ஆத்மாக்களின் கல்லறைகளுக்கு மேல் புத்தபெருமானின் சிலையை வைப்பதை மகாவம்சம் அனுமதிக்கிறதா?

maveerar-thuyilum-illamஇறந்தவர்களை இறைவனுக்கு ஒப்பாகவே உலகத்திலுள்ள அனைத்து மதங்களும் மதிக்கும் அதேவேளை இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களை புனித பிரதேசங்களாக சர்வதேச நியமங்களும் பிரகடனம் செய்துள்ளன. ஆனால் இறந்தவர்களின் கல்லறைக்கு மேல் புத்தபெருமான் குடிகொண்டிருக்கும் ஒரே நாடாக இலங்கை இருக்கின்றது.

எனவே மனித உயிர்கள் விடயத்தில் சிறீலங்காவின் இந்த நிலைப்பாட்டை கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதற்குரிய தகுதிகளில் ஒன்றாக கருத முடியுமா?

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்களின் கல்லறைகளை இடித்து அழித்து விட்டு அதற்குள் புத்தபெருமான் குடியேறியிருக்கும் ஆசியாவின் அதிசயத்தை இலங்கையில் மட்டும் தான் காண முடியும். வீதியால் பயணிக்கும் போது முள்ளியவளை துயிலுமில்லத்தின் முகப்பு தோற்றத்தில் அனைவரது பார்வையும் தெரியும் படி அன்பை உலகுக்கு போதித்த புத்தபெருமான் அமர்ந்திருப்பது மனதுக்கு வேதனையளிப்பதோடு, புத்தபெருமானின் போதனைகளையும், தூய்மையையும் சிறீலங்கா தேசம் மாசுபடுத்தி விட்டதாகவே உணர தோன்றுகின்றது.

புத்தபெருமான் மட்டும் இன்று உயிரோடு இருந்து முள்ளியவளை பக்கம் வந்தால் இலங்கையில் தனக்கு நடந்த இந்த கொடுமை போன்று உலகத்தில் வேறு எந்த தெய்வத்துக்கும் நடக்கக்கூடாது என்று வேண்டி இலங்கையை விட்டு மட்டுமல்ல, உலகத்தை விட்டே ஓடி விடுவார்.

தமிழர்களின் வாழ்வியலில் இறந்தவர்களை கடவுளாக போற்றி வழிபடும் மரபு தொன்று தொட்டு இருந்து வருகின்றது. அவர்கள் தமது போர்த்தெய்வமாக கொற்றவை என்ற நிலை மறந்து தமது உரிமைக்காக போராடி மடிந்த மாவீரர்களை போற்றி வழிபட்டு வருவதை கௌரவமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர்.

உரிமைக்காக போராடி மடிந்த மாவீரர்களின் கல்லறைகளை பல ஆண்டுகளாக வரலாற்றுப் பொக்கிசமாகவே தமிழ் மக்கள் பேணி பாதுகாத்து போற்றி புகழ்ந்து வந்துள்ளனர்.

இப்பூமி பந்தில் தமது அடக்குமுறைகளுக்கு எதிராக உரிமை வேண்டி போராடிய ஒவ்வொரு இனத்தையும் அடக்கி ஆளும் தரப்பு பயங்கரவாதியாகவும், உரிமைக்காக ஏங்குகின்ற மக்கள் குழு அவர்களை தியாகிகளாகவும் பார்ப்பது வழமையாகும்.

ஒரு மனிதன் ஒரு தரப்பின் பார்வைக்கு தியாகியாகவும், இன்னுமொரு தரப்பின் பார்வைக்கு பயங்கரவாதியாகவும் தெரிவதை போன்று இந்திய சுதந்திர போராட்ட தந்தை மகாத்மாகாந்தி, சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களை பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் பயங்கரவாதிகளாகவே சித்திரித்த போதும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரும் அவர்களை நடமாடும் தெய்வமாகவே இறக்கும் வரையும், இறந்த பின்னரும் தமது மனதில் பூசித்து கொண்டாடுகின்றனர்.

அதேபோன்று தான் தமது உரிமைக்காக, விடுதலைக்காக போராடிய மாவீரர்கள் தமிழ் மக்களின் கண்களுக்கு தமது இனத்தின் மீட்பர்களாக தெரியும் அதேவேளை சிறீலங்கா அரசின் கண்களுக்கோ அவர்கள் பயங்கரவாதிகளாக தெரிகின்றனர்.

தமது இனத்தின் விடுதலைக்காக போராடிய சுதந்திர புருசர்களை போற்றி வணங்கும் தமிழ் மக்களின் புனித உணர்வை கொச்சைப்படுத்தும் இழிவு படுத்தும் செயல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டாலும் உலகில் ஒற்றை தமிழன் இருக்கும் வரை தனது நெஞ்சில் தீபம் ஏற்றி மனதார வழிபடும் வரலாற்றை அவர்கள் தொடரத்தான் செய்வார்கள்.

நாட்டின் நல்லிணக்கம் பற்றி பேசும் மகிந்த ராஜபக்ஸ அரசு தமிழ் மக்களின் மனங்களில் சிறிதளவேனும் இடம் பிடிக்க வேண்டுமென்றால் தமிழ் மக்களின் உரிமைக்காக உயிர் நீத்த அனைத்து போராளிகளுக்கும் நினைவுச்சின்னங்கள் அமைத்து அவர்களை தமிழ் மக்கள் தடையின்றி நினைவு கூர வழிவகை செய்ய வேண்டும்.

ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் செய்யும் போதெல்லாம் தமிழர்களுக்கு இறந்த உயிர்களை தவிர எல்லாவற்றையும் தருவேன் என திருவாய் மலர்ந்தருளி தேவவாக்கு சொல்லும் அவர் முதலில் தமிழ் மக்கள் இறந்த தம் பிள்ளைகளை, உறவினர்களை நினைவு கூர்ந்து வழிபடும் உரிமையை தரட்டும்.

Tags: ,

Leave a Reply