வடக்கு மக்களின் அரசியல் எழுச்சியை அரச தலைவர்கள் மதித்து நடப்பரா?

northern_mapஇலங்கையின் மாகாணங்கள் ஒன்பது. அவற்றுக்குக் கொழும்பு அரசின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரும் குடியியல் சிவில் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள்.

இலங்கையின் மாகாணங்கள் ஒன்பது. அவற்றுக்குக் கொழும்பு அரசின் பிரதிநிதிகளாக ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஏழு பேரும் குடியியல் சிவில் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள். ஆனால் ஏனோ, தமிழ் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கிழக்கில், அதன் மாகாண சபைக்கு ஏற்கெனவே கடற்படை முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதே வரிசையில் அல்லது பாணியில் வடக்கிலும் இராணுவ முன்னாள் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

வடக்குகிழக்கு மாகாண சபைக்கு 1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலின் பின்னர்
முதன்முதலாக வடக்கு மாகாண சபைக்கு இருபத்தைந்து ஆண்டுகளின் பின்னர் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று புதிதாக மக்கள் ஆட்சி ஆரம்பமாகி உள்ளது.

ஆனால் ஆளுநர் பதவிக்கு குடியியல் அதிகாரி ஒருவரை நியமிப்பதில் கொழும்பு அரசு அக்கறை கொள்வதற்கான அறிகுறி எதுவும் கிஞ்சித்தும் வெளிப்படவில்லை; மணக்கவும் இல்லை!

இதனை மனதில் கொண்டு வடக்கு மாகாண சபையின் முதல் அமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமது கன்னி உரையில் வடக்கு மாகாணத்துக்கு குடியியல் அதிகாரி ஒருவரை ஆளுநராக நியமிக்குமாறு வலியுறுத்தி இருந்தார்.
இராணுவ அதிகாரி ஒருவர் வடக்கு மாகாண ஆளுநராகக் கடமை ஆற்றும் பட்சத்தில், குடியியல் நிர்வாகத்தை நடத்த முடியாது. ஜனாதிபதி வடக்கில் உண்மையிலேயே குடியியல் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்று விரும்பினால், எமது மக்களின் எதிர் பார்ப்புக்குப் பொருத்தமானவரை ஆளுநராக நியமிக்க வேண்டும்

இராணுவத்திலிருந்து பிரிவுறாத ஒருவர் ஆளுநராக இருக்கும் போது சிவில் நிர்வாகம் நடைபெறாது. இன்றைய வடக்கு மாகாண ஆளுநர், எவ்வாறு வெளிப்படையாக வட மாகாணத் தேர்தல் விடயங்களில் பக்கச் சார்பாக நடந்து கொண்டார் என்பது நாடறிந்த விடயம்

ஜனாதிபதி வடக்கில் சிவில் நிர்வாகத்தை வரவேற்பது உண்மையானால், ஆளுநர் பதவிக்கு தகைமை உடைய இராணுவத்தினர் அல்லாத ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிக்கக் கோருகிறோம் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அவற்றுக்கும் மேலாக, முதலமைச்சர் தெரிவித்த பின்வரும் காரணம் முழுக்க முழுக்க மக்கள் நலன்களை நாடியவை என்பதனை கொழும்பு அரசாங்கத்தின் பிரதானிகளில் எவரும் தட்டிக் கழிக்க முடியாது.
போருக்குப் பின்னரான சூழலில், புனர்நிர்மாணம், புனருத் தாரணம், புனரமைப்பு, அபிவிருத்தி ஆகியவை சம்பந்தமான அனுபவத்தையும்

பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், இளைஞர்கள், முன்னாள் போராளிகளின் வாழ்வில் கரிசனை கொண்டவருமான ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்

இது அவரது சொந்தக்கருத்து என்பதற்கும் மேலாக, அவரை இப்பதவிக்குத் தெரிவு செய்த மக்களின் தேவையும் விருப்பமும் ஆகும். இதனை அரசாங்கம் மிகக் குறிப்பாக ஜனாதிபதி கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் வடக்கு முதலமைச்சரின் கருத்தை, நிலைப்பாட்டை பிசிறின்றி ஆதரித்துள்ளமை நோக்கற்பாலது.

வடக்கில் மாகாணசபை இப்போது நிறுவப்பட்டுள்ள நிலையில் இராணுவ அதிகாரி அல்லாத ஒருவர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் வலியுறுத்தி உள்ளார்.
இராணுவத்தைச் சேராத அதிகாரி ஒருவரே வடக்கின் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும்.

வடக்கில் ஜனநாயக அரசு நிறுவப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறிருக்க, மாகாணசபை தனது நிர்வாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்கா தெரிவித்திருக்கிறார்.

வடக்கு மாகாணம் ஜனநாயக நீரோட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், அங்கு ஆளுநராகப் பணியாற்றி வரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியை அப்பதவியில் இருந்து நீக்கி, சிவில் ஆளுநரை நியமிக்க வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொறுப்புச் செயலாளர் வலியுறுத்தி உள்ளதை

எதிர்க்கட்சி என்றால் எப்போதும் அரசின் முடிவுகள், செயற்பாடுகளுக்கு எதிராகவே கருத்துக்கூறும் என்று அரச தரப்பு தட்டிக் கழிக்கக் கூடிய விடயம் அல்ல இது. வடக்கு மக்களின் வாக்கு மூலமான அரசியல் எழுச்சியைக் கெளரவித்து, அதனை மனம் கொண்டு நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.

இலங்கையில் ஆட்சியில் இருப்பது ஜனநாயக அரசா அன்றி சர்வாதிகார நிர்வாகமா என்பதனை வடக்கு மாகாண ஆளுநர் விவகாரம் அச்சொட்டாகச் சுட்டிக் காட்டும். அனைத்துலக நாடுகளும் அதனை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன என்பதனை மறந்துவிடலாகாது.

Tags: , , ,

Leave a Reply