வாருங்கள் வடக்குக்கு மன்மோகனுக்கு அழைப்பு; முதலமைச்சர் விக்னேஸ்வரன் விடுத்தார்

manmohan_singh2வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுமாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

மன்மோகனுக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளதாக இந்தியப் பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் நேற்று “த ஹிந்து’ நாளிதழுக்கு தெரிவித்துள்ளார்.
கடிதம் அனுப்பப்பட்ட தகவலை நேற்று “உதயனி’டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் உறுதிப்படுத்தினார்.
வடக்கு மாகாணசபையின் கன்னி அமர்வு கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற தினத்தன்றே வடக்குக்கு வருமாறு இந்தியப் பிரதமருக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார் என்று சம்பந்தன் குறிப்பிட்டார்.
அந்தக் கடிதத்தில், “நீண்ட காலத்துக்குப் பின்னர் நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டி மாகாணசபையைத் தன்வசப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மாகாண சபையின் கன்னி அமர்வு இன்று முதலமைச்சர், அமைச்சர்கள், சபை உறுப்பினர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்நிலைமையை ஏற்படுத்தித் தந்ததில் இந்தியாவின் பெரும் பங்குண்டு என்பதை நாம் மறக்கமாட்டோம். வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அழுத் தங்களை வழங்கியிருந்தது.
தங்கள் அழுத்தங்களின் பின்னணியில் தான் வடக்கு மாகாணசபைத் தேர்தலை இலங்கை அரசு நடத்தியது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும், வடக்கு மாகாண மக்கள் சார்பிலும் தங்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து என்னைச் சந்தித்த தங்கள் நாட்டு வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், புதுடில்லிக்கு என்னை வருமாறு அழைப்புத் தந்தார். மிக்க நன்றி. தங்கள் நேரகால வசதிக்கேற்ப நான் விரைவில் புதுடில்லி வந்து தங்களைச் சந்திப்பேன்.
அதேவேளை, இந்தியப் பிரதமர் என்ற ரீதியில் தாங்களும் வடக்கு மாகாணத்துக்கு வந்து இங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடுமாறு வேண்டிக் கொள்கின்றேன். இதை எமது வடக்கு மக்களும் விரும்புகின்றார்கள்” என்று அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாண  முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
“இந்தியப் பிரதமருக்கு வடக்கு முதலமைச்சர் அனுப்பிய கடிதத்துக்கும் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அந்தக் கடிதத்தில் பொதுநலவாய மாநாடு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும்  முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிடவில்லை” – என்றும் சம்பந்தன் கூறினார்.
இந்தக் கடிதம் இந்தியப் பிரதமரின் அலுவலகத்துக்கு கடந்த 28ஆம் திகதி கிடைக்கப் பெற்றதாக பிரதமரின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
Tags: ,

Leave a Reply