பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என, தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள், மாணவர்கள் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என, தாங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் மாணவர்கள் கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் இருந்து பிரசாரம் செய்தபடி தஞ்சை செல்ல முடிவு செய்தனர்.
இதனை நடிகர் சத்யராஜ் தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக சேப்பாக்கத்தில் மாணவர் கூட்டமைப்பினர் கார்த்திக் தலைமையில் திரண்டனர்.
தகவல் கிடைத்ததும் பொலிசார் விரைந்து சென்று மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 பேரை கைது செய்தனர்.
இதில் பங்கேற்ற ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளி பேரறிவாளன் தாயார் அற்புதம்மாளும் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாணவர் இயக்கம் சார்பில் பல்லாவரம் மறைமலை அடிகள் பாடசாலை மாணவர்கள் 30 பேர் தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அவர்களை தாம்பரம் பொலிசார் கைது செய்தனர்.
இலங்கையில் நடந்த இறுதிக் கட்ட போரில் விடுதலைப் புலிகளின் ஊடகப்பிரிவு நிகழ்ச்சி தொகுப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட காட்சியை சேனல்–4 தொலைக்காட்சி வெளியிட்டது.
இது அனைத்து தரப்பினரிடமும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் அடையாறில் இன்று திடீர் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு பொலிசார் அனுமதி அளிக்கவில்லை.
ஆனாலும் தடையை மீறி தென்சென்னை மாவட்ட தலைவர் வேல்ராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்றனர். உடனே பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கட்சி நிர்வாகிகள் குமார், பழனி உள்பட 75 பேர் கைது செய்யப்பட்டனர்.
















