பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் பணிப்பாளா கலம் மக்ரே இந்தியாவிற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமது சொந்த ஆவணப்படம் ஒன்றை தலைநகர் புது டெல்லியில் காட்சிப்படுத்த, மக்ரே இந்தியாவிற்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார். எனினும், இந்த நிகழ்வில் பங்கேற்பதற்கு இந்தியாவிற்குள் பிரவேசிக்க மக்ரேவிற்கு வீசா வழங்கப்டவில்லை.
கடந்த ஆண்டுக்கான நோபள் சமாதான விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த மக்ரே இலங்கை தொடர்பிலான சில ஆவணப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 7ம் திகதி இலங்கை தொடர்பான ஆவணப்படமொன்றை டெல்லியில் திரையிட மக்ரே திட்டமிட்டிருந்தார். எனினும், நாட்டிற்குள் பிரவேசிக்க இந்திய அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாகவும் இது அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் மக்ரே தெரவித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் இந்தியா உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றமையை தாம் அறிவதாகவும், இவ்வாறான ஓர் நிலைமையில் தமது ஆவணப்படத்தை காட்சிப்படுத்த அனுமதிக்காமை கவலையளிப்பதாகவும் அவா சுட்டிக்காட்டியுள்ளார். 6ம் திகதி பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்தாகவும் இதுவரையில் வீசா கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே வீசாவிற்காக தாம் விண்ணப்பித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த பெப்ரவரி மாதமும் மக்ரே இந்திய வீசாவிற்காக வி;ண்ணப்பிருந்த போதிலும், சாதக பதில்கள் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் பயணங்களை மேற்கொண்டு ஆவணப்படங்களை காட்சிப்படுத்தி வருவதாகவும், இலங்கை அரசாங்கம் தமது முயற்சியை திட்டமிட்ட வகையில் தடுத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அழுத்தங்கள் காரணமாக தமக்கு இந்தியா வீசா வழங்க தயக்கம் காட்டி வருவதாக தாம் கருதுவதாக மக்ரே தெரிவித்துள்ளார்.
















