அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் நடத்தி பாகிஸ்தானின் இறையாண்மையை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் குற்றஞ்சாட்டினார்.
பாஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ களப்பயிற்சியில் கலந்து கொண்டு நவாஸ் ஷெரீப் பேசியது:
அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் மூலம், கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானில் தலிபான்கள் இயக்கத் தலைவர் ஹகிமுல்லா மசூதை கொன்றது. இதன் மூலம் அமெரிக்கா, பாகிஸ்தானின் இறையாண்மையை சீர்குலைக்க முயற்சித்ததுடன், சர்வதேச சட்டத்தையும் மதிக்கத் தவறியுள்ளது.
பாகிஸ்தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயக ஆட்சியை நாங்கள் நடத்தி வருகிறோம். உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் எத்தகைய சவால்களையும் நமது அரசு சந்திக்கும்.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதல் தேசிய அளவில் நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டிய தருணத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார் நவாஸ் ஷெரீப்.
ஐஎஸ்ஐ அமைப்பு கண்காணிப்பு மசோதா: இதனிடையே, பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் செயல்பாடுகளை அந்நாட்டு நாடாளுமன்றம் கண்காணிக்கும் மசோதாவுக்கு செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த மசோதாவை மனித உரிமைகளுக்கான நிலைக்குழு, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. அதன்மூலம், ஐஎஸ்ஐ அமைப்பின் செயல்பாடுகளை பாகிஸ்தான் நாடாளுமன்றம் கண்காணிக்க முடியும். ஐஎஸ்ஐ அமைப்பை கண்காணிப்பதற்கான மசோதாவுக்கு பாராளுமன்ற இரு அவைகளும் ஒப்புதல் வழங்க வேண்டும்.
















