பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்பதா? வேண்டாமா? என்பது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர்களுடன் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்தினார்.
இச்சந்திப்புக்கு பிறகு, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது,
இலங்கை விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே இலங்கை பிரச்சினை குறித்து தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தி பா.ஜ.க.வின் கருத்தை விளக்கி இருக்கிறோம்.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். ஆனால் காலம் கடந்து விட்டது. இப்போது, இலங்கையில் நடக்கும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என்பதுதான் தமிழ்நாடு பா.ஜ.க.வின் நிலைப்பாடு.
எங்கள் கட்சியின் சில தலைவர்கள் இந்த மாநாட்டுக்கு பிரதமர் போகலாம் என்று கருத்து தெரிவித்து இருப்பது உண்மை. ஆனால் அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. ஏன் இப்படி தெரிவித்து இருக்கிறார்கள் என்றால், பிரதமர் இலங்கைக்கு சென்று அந்த மாநாட்டில் கலந்து கொண்டால் அங்கு இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தெளிவாக எடுத்துச்சொல்லலாம் என்ற எண்ணத்திலும் இருக்கலாம்.
ஆனால், நம் பிரதமர் அங்கே போய் இதையெல்லாமா பேசப்போகிறார்? கண்டிப்பாக பேசமாட்டார். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினை பற்றி பேசமுடியும்?
எனவே, பிரதமர் அந்த மாநாட்டுக்கு போவது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் காயப்படுத்தும் காரியமாகும். இதனை எங்கள் தலைவர் ராஜ்நாத்சிங்கிடம் தெரிவித்தோம் என்றனர்.
ஆனால், பா.ஜ.க. தேசிய தலைமை இதுவரை எதுவும் சொல்லவில்லையே. அவர்கள் இதுகுறித்து முடிவுகள் ஏதும் எடுக்கவில்லையா? என்ற கேள்விக்கு,
எங்கள் கோரிக்கையை மிகவும் பொறுமையாக கேட்டார்கள். நன்கு புரிந்து கொண்டார்கள். எனவே, வெகுவிரைவில் இதுகுறித்து தேசிய தலைமை ஒரு முடிவுக்கு வரலாம் என்று தெரிவித்தனர்.
















