இலங்கை பிரச்னை தீர்ந்தால் தமிழகத்தில் சில அரசியல் கட்சிக்கு வேலையிருக்காது: ஞானதேசிகன்

ganathesikanஇலங்கைப் பிரச்னை தீர்ந்தால் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய் விடும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பேசுகையில், “இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இங்குள்ள ஒரு சில அரசியல் கட்சிகள் குரல் கொடுத்தன. ஆனால் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அங்கு தேர்தல் நடத்தி தமிழர் ஒருவரை முதல்வர் ஆக்கியது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான்.

இலங்கைப் பிரச்னை தீர்ந்தால் இங்குள்ள சில அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய் விடும். அதனால்தான் அதனைப் பற்றியே எப்போதும் பேசிக் கொண்டுள்ளனர். ஆனால் வடக்கு மாகாண விக்னேஸ்வரனும், அங்குள்ள தமிழர்களும் தமிழகத்தின் அரசியல் கட்சிகளில் எங்களைப் பற்றி பேசாதிருந்தாலே போதும் எங்களை வைத்து அரசியல் செய்யாதீர் என்றே கூறுகின்றனர்.

மத்திய அரசு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக 4000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அங்கு உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், சாலைகள் அமைக்க இந்த நிதி உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் வடக்கு மாகாணத்திற்கு வருவாய் மற்றும் காவல் துறை உரிமை அதிகாரங்களைப் பெற்றுத் தர தற்போது காங்கிரஸ் கட்சி இலங்கை அரசிற்கு அழுத்தம் தந்து வருகிறது” என்றார்.

முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், “தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடும்” என்றார்.

Tags: , ,

Leave a Reply