இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொது நலவாய மாநாட்டுக்காக இலங்கை வந்துள்ள சனல் 4 ஊடகவியலாளர்கள் இன்று வடபகுதி செல்ல இருந்த நிலையிலேயே இந்த ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கலாபோவஸ்வவெ, நாமல்கம, பூனாவ, மதவாச்சி, ஈரட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்து வருகை தந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் வீதியை மறித்து மதியம் 12 மணியில் இருந்து 1 மணி வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனல் 4 ஊடகவியாலாளர்கள் வட பகுதிக்கு வரக் கூடாது எனவும், அவர்களை அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் எனக் கோரியும் இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது சனல் ஊடகவியலாளர்களை வெளியேற்று, எமது ஒற்றுமையை குழைக்காதே, சனல் 4 வேணாம் போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
இதனால் ஏ9 வீதிப் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிப்படைந்தது.
இதில் வடமாகாணசபை உறுப்பினர்களான தர்மபால செனவிரத்ன, ஜெதிலக, வவுனியா மாவட்ட மக்கள் ஒன்றியத் தலைவர் க.குமாரசாமி உள்ளிடட பெரும்பான்மையினர் கலந்து கொண்டனர்.




















