காணாமல் போன தமது உறவுகளை தேடி கண்டுபிடித்துத் தருமாறு அவர்களஜன் உறவினர்களால் வவுனியாவில் இன்று மாபெரும் தீப்பந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
வவுனியா மாவட்ட காணாமல் போன உறவுகளைத் தேடும் சங்கம் மற்றும் வவுனியா மாவட்ட பிரஜைகள் இணைந்து இப் போராட்டத்தினை நடத்தின.
இதன்போது, காணாமல் போன எமது உறவுகள் எங்கே?, எனது அண்ணாவை பார்க்க ஆசையாக இருக்கிறது, வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை, கொலை குற்றவாளி வீட்டில் பொதுநலவாய மாநாடா?, பதில் சொல்லு மகிந்த அரசே, போன்ற சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
திருக்கார்த்திகை தினமான இன்று கைகளில் தீப்பந்தங்களை ஏந்தியவாறு வவுனியா கந்தசாமி ஆலய முன்றலில் தமது போராட்டத்தை மேற் கொண்டனர். காலை 11 மணியில் இருந்து மதியம் 1 மணிவரை இப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராஜா, வடமாகாணசபை உறுப்பினர்களான வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம், ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா, சி.சிவமோகன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் பாஸ்கரா, தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.




















