இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் எதுவித மாற்றமும் இல்லை. அதேவேளை, இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் தலையிட்டு நிலைமையை சிக்கலாக்க வேண்டாம் என்று இலங்கைக்கான சீனத் தூதரகம் கோரியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துமாறு சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள இலங்கைக்கான சீனத் தூதரகம், ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை தொடர்பான சீனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. கடந்த சில வருடங்களாக இலங்கை மனித உரிமை விவகாரங்களில் பெரும் ஊக்குவிப்பை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் தேசிய நல்லிணக்கத்தையும் மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர்.
சர்வதேச சமூகம் இந்த விடயங்களில் தலையீடு செய்து நிலைமையைக் குழப்பகரமானதாக்கக் கூடாது. மாறாக இலங்கையில் நிலைத்திருக்கக் கூடிய பொருளாதார அபிவிருத்திக்கு, பொருத்தமான புறச் சூழலையே சர்வதேசம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் – என்று தெரிவித்துள்ளது.
















