நாயாறு மக்கள் வழிபடவும் இராணுவத்தினர் தடைவிதிப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகன் குற்றச்சாட்டு

sivamokanயுத்தம் முடிவடைந்த நிலையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள நாயாறு மக்கள் சுதந்திரமாக வழிபடுவதற்கு இராணுவத்தினர் தடையாகவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாயாறு பிரதேச மக்களுடனான சந்திப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாயாறு பிரதேச மக்களின் காணிகளில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இவ் இராணுவ முகாம் பகுதிக்குள் அப் பிரதேச மக்கள் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வந்த ஏற்றத்தடி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. அப் பிரதேச மக்களின் நம்பிக்கைக்குரிய பிரதான வழிபாட்டுத்தலமான ஏற்றத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு விசேட தினங்களில் கூட சென்று வழிபட இராணுவம் அனுமதி மறுத்துவருவதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இவ் ஆலயத்தின் அருகில் புத்தர் சிலை நிறுவப்பட்டு அது பௌத்த வழிபாட்டுத்தளமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இது தவிர, நாயாறு பாலத்தடியில் உள்ள முனியப்பர் ஆலயத்திலும் வழிபாட்டு நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கற்பூரம் கொழுத்துவதற்கும், பொங்கல் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் கூட்டமாக சென்று ஆலயத்தில் வழிபடுவதற்கும் இராணுவத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் மக்கள் தற்போது குடியிருக்கின்ற நாயாறு குடியிருப்பு பகுதியில் வீதியோரத்தில் உள்ள மரத்தின் கீழ் சிறிய வழிபாட்டிடம் ஒன்றை அமைத்து வழிபட்டு வரும் நிலையில் அங்கும் சுதந்திரமாக வழிபடமுடியாதவாறு இராணுவ காவலரண் ஒன்றினை ஆலயத்திற்கு மிக நெருக்கமாக இராணுவத்தினர் அமைத்துள்ளனர். இதனால், ஆலயத்தை சுற்றி வழிபட முடியாத நிலை காணப்படுவதாகவும் அப் பகுதி மக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்.

எனவே, இராணுவ முகாம்களை அகற்றி மக்கள் சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்ளவும் தமது மதத்தை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply