வடமாகாண சபையில் செயலாளர்களாகப் பணிபுரிபவர்கள் தமது எதேச்சதிகாரப் போக்குகளைக் கைவிட்டு மக்கள் பிரதிநிதிகளுடன் இணைந்து செயலாற்ற முன்வரவேண்டும் அல்லது தமது பதவிகளைத் துறக்க வேண்டும் என்று தெரிவித்தார் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்.
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மன்னார் மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கும் வரவேற்பு நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மன்னாரில் இடம்பெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண சபையின் உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா உரையாற்றும்போது தெரிவித்ததாவது,
நீண்ட பெரிய பயணத்தின் பின்னர் வடமாகாணத்தில் தமிழர்கள் ஆட்சியமைத்திருக்கின்றார்கள். ஆனால் தமிழ்த் தேசியத்தின் போக்கை எப்படியாவது விழுத்திவிட வேண்டும் என்பதில் சிங்கள பேரினவாத அரசு பல்வேறு விதமான முட்டுக்கட்டைகளை வடமாகாண சபைக்கு ஏற்படுத்தி வருகின்றது.
வட மாகாண சபை மீது இந்த மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை எப்படியாவது மிகவும் தீர்க்க தரிசனத்துடனும், ராஜதந்திர ரீதியாகவும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
மக்கள் எங்களுக்கு அளித்த வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபையை அமைக்க வேண்டும், அதனூடாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
இன்றைய சூழ்நிலையில் எமது மக்களின் எதிர்பார்ப்புக்கள் பல கோணங்களில் அமைந்துள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் மன்னார் மாவட்ட மக்களுக்கென மாதத்தில் இரண்டு நாள்களை ஒதுக்கித்தர வேண்டும்.
எமது மக்களின் பிரச்சினைகளை அடையாளம் காண்பதற்கும், பிரச்சினைகளை நேரடியாகச் சொல்வதற்கும் இந்த இரு தினங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.
எனவே முதலமைச்சரும் அமைச்சர்களும், செயலாளர்களும் இணைந்து மாதத்தில் இரண்டு நாள்களாவது இங்கு வந்து மக்களின் குறைகள், பிரச்சினைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் – என்றார்.
வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மன்னார் வட மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரையும் வரவேற்கும் மாபெரும் வர வேற்பு நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்திலுள்ள அனைத்து கூட்டுறவுச் சங்கங்களும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து அமைச்சர் பா. டெனீஸ்வரன், சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் பி.சத்தியலிங்கம், கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், அயூப் அஸ்மீன் ஆகியோர் கெளரவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர்.
மன்னார் பஸார் பகுதியில் இருந்து மன்னார் நகரசபை மண்டபம் வரை விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டு பின் நிகழ்வுகள் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு விருந்தினர்களின் சிறப்புரைகளும் இடம்பெற்றன. இதன்போது சர்வமதத் தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்படப் பல நூற்றுக் கணக்கானவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
















