“புலிகளின் மாவீரர் நினைவுத் தூபிகள் இந்த நாட்டில் எந்த மூலையிலும் இருக்கக்கூடா. அவை அழிக்கப்பட்டே ஆக வேண்டும். அத்துடன், இராணுவத்தினரின் நினைவுத் தூபிகளைத் தமிழர்களும் வழிபட வேண்டும்” என சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சட்டம், ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:
போரினால் வடக்குக்கு மட்டுமல்ல, முழு நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடக்கிலும், தெற்கிலும் மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால், இன்று மக்கள் சுதந்திரக்காற்றை சுவாசிக்கின்றனர். நகர அபிவிருத்தி அமைச்சால் இன்று நகரங்கள் புதுவடிவம் பெறுகின்றன.
இதற்கு உதாரணமாக கிளிநொச்சி சென்று பாருங்கள். புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள், படகுகள், நினைவிடங்களைக் காட்சிப்படுத்தி மக்களிடத்தில் குரோதங்களை வளர்க்கக்கூடாது.
புலிகளின் மாவீரர் நினைவுத் தூபிகள் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அவற்றை அழிக்க வேண்டும் என இச்சபையில் கோருகிறேன்.
அத்துடன், ஆனையிறவு மற்றும் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள இராணுவத்தினரின் நினைவுத் தூபிக்குச் சென்று தமிழ் மக்களும் வழிபடவேண்டும். படையினர் தான் தமிழருக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்தனர் – என்றார்.
















