அளம்பில் வைத்தியசாலை சீராக இயங்காமையால் நோயாளர்கள் அவதி: வடமாகாணசபை உறுப்பினர் சி.சிவமோகனிடம் முறைப்பாடு

sivamokanமுல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமித்து தருமாறும் அப் பகுதி மக்கள் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகனிடம் கோரிக்கை விட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் பிரதேசத்தில் மத்திய மருந்தகம் ஒன்று காணப்படுகின்றது. இவ் மத்திய மருந்தகத்தினையே செம்மலை, அளம்பில், நாயாறு, கொக்குத் தொடுவாய், கருநாட்டாங்கேணி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், இவ் மருந்தகத்திற்கு தங்குமிடத்துடன் கூடிய நிரந்தரக் கட்டிடம், அம்புலன்ஸ்வண்டி மற்றும் வோட் வசதி என்பன இருக்கின்ற போதும் நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படவில்லை. சிங்கள வைத்தியர் ஒருவரே சில தினங்களில் சிறிய நேரம் வந்து நோயாளர்களை பார்வையிடுவதாகவும், அவ் வைத்தியரிடம் மொழிப் பிரச்சனை காரணமாக தமது நோய்களை கூறமுடியாதுள்ளதாகவும் அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் அவர்களிடம் கேட்டபோது, அளம்பில் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமித்து தருமாறும் அவ் வைத்தியசாலைக்கு மின்சாரத்தினை பெற்றுத் தருமாறும் அப்பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். இவ் வைத்தியசாலையில் நிலையான கட்டிடம், தங்கிடம், நோயாளர் விடுதி, மற்றும் நோளாளர் காவு வண்டி என்பன இருக்கின்றமையால் வைத்தியர் ஒருவரை நியமிக்க எந்த பிரச்சனையும் இருக்காது. எனவே இது தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதுடன், வடமாகாணசபை அமர்விலும் இது பற்றி கலந்துரையாடி முடிவெடுக்கப்படும் எனவும் தெரித்தார்.

Tags: , ,

Leave a Reply