அடுத்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மற்றுமொரு பிரேரணை சமர்பிப்பதற்கு முன்னோடியாக, இங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காகவே அமெரிக்க வெளிவிவகாரங்களைக் கையாளும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டேமியன் நேர்பி தலைமையிலான மூன்று சிரேஷ்டநிலை அதிகாரிகளும் வருகை தந்துள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இலங்கைக்கு நேற்று வருகை தந்த அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரையும், சிவில் சமூகத்தினரையும் சந்தித்தனர்.
அதன் பின்னர் நேற்றிரவு, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோரை இரவு உணவுடன் இரு மணி நேரம் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தக் கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்ததாவது:
தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை குறித்தே சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. கடந்த இரு தடவைகள் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளமை மற்றும் அதனால் இங்கு எவ்வாறான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கில் மாகாண சபை அமைக்கப்பட்ட பின்னரும், இராணுவத்தினராலும், அரசாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் பூரணமான தகவல்கள் அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டன.
குறிப்பாக வலி.வடக்கில் இராணுவத்தினரால் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் காணிகள் முடக்கப்பட்டுள்ளமை, மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் இராணுவத் தலையீடுகள் தொடர்பிலும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.
தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பிலும், தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்கள் பிரச்சினை ஆகியன தொடர்பிலும் இதில் சுட்டிக் காட்டப்பட்டது.
புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபையைக் கொண்டு நடத்துவதில் தொடர்ச்சியாக மத்திய அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது. வடக்கு மாகாணசபைக்கு உரிய அதிகாரங்கள் வழங்கப்படாமையால் அதன் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் தடங்கல்கள் நிலவுகிறது. இவை தொடர்பிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினோம் – என்றார் சுமந்திரன்.
இலங்கை அரசுக்கு எதிராக அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் மற்றுமொரு பிரேரணை முன்வைப்பதற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக மேற்படி குழுவினர் இங்கு வந்துள்ளனர்.
இன்று திருகோணமலைக்கு செல்லும் இந்தக் குழுவினர், வடக்கு – கிழக்கு உட்பட சகல பகுதிகளையும் நேரடியாகப் பார்வையிட்டு நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கையிடவுள்ளனர் என்றும் சுமந்திரன் மேலும் கூறினார்.
















