அமெரிக்க நிறுவன மதுபான போத்தலில் சிவபெருமானின் படம் மற்றும் பெயரை பதித்துள்ளதற்கு உலகின் மற்ற மதங்களைச் சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கரோலினாவின் இந்தியன் பேல் அல் பீர் நிறுவனம் தனது தயாரிப்பில் இந்து கடவுள் சிவனின் படத்தை போட்டிருப்பது இந்துக்களை வேதனைக்குள்ளாக்கி உள்ளதாக கிறிஸ்தவ, பௌத்த மற்றும் ஜூவிஸ் மத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்து மத தலைவர் ராஜன் ஜெத் கூறுகையில், அதிகப்படியான இந்துக்களால் வழிபாடு செய்யப்படும் சிவனை அவமதிக்கும் விதமாக இவ்வாறு செய்துள்ளது சரியாது அல்ல எனவும், இதற்காக அந்நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அந்நிறுவனம் தனது தயாரிப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த மதுபான போத்தலில் நடராஜர் படம் பொறிக்கப்பட்டு சிவன் என பெயரிடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நிவேதாவில் உள்ள கிறிஸ்தவ மத போதகர் ஸ்டீபன் ஆர்.கார்செர் கூறுகையில்,
இது முற்றிலும் கண்டிக்கதக்கது ஏற்றுக் கொள்ள முடியாதது, எனது இந்து நண்பர்களும் இது குறித்து வருத்தம் கொண்டுள்ளனர். கலாச்சாரத்தை சீரழிப்பதாகவும், மத நம்பிக்கைகளை குலைப்பதாகவும் இச்செயல் உள்ளது. இது இந்துக்களை மட்டுமின்றி அனைவரையும் மதங்களின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மத போதகர் ரிச்சர்ட் எல்.ஸ்மித் கூறுகையில், இது குறித்து இந்துக்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும், இந்த நிறுவனம் ஏற்கனவே தனது தயாரிப்பு ஒன்றிற்கு கிறிஸ்துவை குறிப்பிடும் படியான பெயரை சூட்டி உள்ளது அனைவராலும் கண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பௌத்த மத அமைச்சர் ஜிகைய் பில் பிரைன் மற்றும் யூதர்கள் தலைவர் ரப்பி எலிசபெத் டபிள்யூ.பேயர் ஆகியோரும் தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
















