மக்களின் உரிமைகளுக்காக அரசுடன் பேசுவதற்கு தயார்; சூழ்ச்சிக்கு துணைபோக மாட்டோம் என்கிறார் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன்

sambanthan-talk13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் மாகாண சபைகள் இயங்க அரசு அனுமதி வழங்க வேண்டும். அதற்காக நாம் அரசுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால், எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.வில் தாம் தப்புவதற்காக அரசு எம்மைப் பேச்சுக்கு அழைத்தால் நாம் ஒருபோதும் உடன்படப்போவதில்லை. இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் பொது மக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

உள்ளூராட்சி மன்றங்களான மூதூர், தம்பலகாமம், குச்சவெளி போன்றவை முன்னைய காலங்களில் தமிழ் மக்களின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருந்தன. ஆனால், இப்போது இடப்பெயர்வு வேறு இனங்களின் துரித சனப்பெருக்கம், எமது மக்கள் வாக்களிக்க முடியாத நிலை போன்ற காரணங்களால் திருகோணமலை நகர சபை, வெருகல் பிரதேச சபை, பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய மூன்று சபைகள் மட்டுமே எம்வசம் உள்ளன.

ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இந்த சபைகளில் மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்க வேண்டியது எமது கடமையாகும். உள் முரண்பாடுகள் மக்கள் பிரச்சினைகளை மேலும் பெரிதாக்குவதுடன் எமது சுயநிர்ணய கோரிக்கைக்கும் விரோதமாகிவிடும்.

13ஆவது திருத்தத்தை இல்லாமல் செய்வதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கொண்டுவந்த தீர்மானம் கூட்டமைப்பின் ஆதரவுடன் வெற்றி பெற்றதன் மூலம் இவ்வாறான சூழ்ச்சிகள் முறியடிக்கப்பட்டன.

காலம் காலமாக அதிகாரப் பகிர்வு, ஆட்சி மாற்றம், சுயநிர்ணய உரிமை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் மக்கள் போராடி வருகின்றனர்.

எமது மக்களுக்கான பாதுகாப்பு காணி, மொழி, கலாசாரம், சமூக பொருளாதார, விவசாய, கைத்தொழில் போன்ற பல்வேறு உரிமைகளையும் வலியுறுத்தி சட்டத்தில் உள்ளபடி எமக்கு அதை வழங்கக்கோரி நாம் போராடுகிறோம். இதில் என்ன தவறு இருக்கிறது.

இராணுவக் கெடுபிடிகளுக்கு மத்தியிலும் வட மாகாண சபையில் 30 ஆசனங்களைப் பெற்று மக்களின் விருப்பத்தை சர்வதேசத்துக்குத் தெரியப்படுத்தினோம். ஆனாலும்கூட வடமாகாண சபையை முழுமையாக இயங்க வைக்க முடியவில்லை.

காரணம் முதலமைச்சர், அமைச்சர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்களுக்கான அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. மேலும் எவருடைய தயவுடனும் வட மாகாண சபையை ஆட்சி செய்ய வேண்டும் என்ற அவசியமும் எமக்கில்லை.

13ஆவது திருத்தத்தின் அடிப்படையில் எம்மை ஆட்சி செய்ய விட வேண்டும். அந்த ஒழுங்குகள் எமக்குக் கிடைப்பதற்காக நாம் அரசுடன் பேசத் தயாராக உள்ளோம்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா.வில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் சபைக் கூட்டத்தில் அரசு தம்மைப் பாதுகாப்பதற்காக எம்மைப் பேச்சுக்கு அழைத்தால் அதற்கு நாம் உடன்படத் தயாரில்லை.

எமது பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேச தலைவர்களுக்குத் தெரியப்படுத்தி வருகிறோம். இந்த நிலையில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

குறிப்பாக இந்த உண்மையை முஸ்லிம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். சில சமயம் நாம் மக்களை ஒன்று திரட்டி சாத்வீக போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலையும் ஏற்படலாம் – என்றார்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சி உறுப்பினர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா, பட்டினமும் சூழலும் பிரதேச சபைத் தலைவர் விஜேந்திரன், வெருகல் பிரதேச சபைத் தலைவர் விஜயகாந் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

Tags: , ,

Leave a Reply