விவசாயி, வாக்காளர் என்ற இரு கடவுள்களை பாஜகவினர் மறந்துவிட்டனர் – ஜோதிராதித்யா குற்றச்சாட்டு

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பாஜகவினர் விவசாயி, வாக்காளர் என்ற முக்கியமான கடவுள்களை மறந்துவிட்டனர் என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா குற்றம் சாட்டியுள்ளார்.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜோதிராதித்யா சிந்தியா நேற்று கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

நமக்கு உணவிடும் அன்னதாதாவான விவசாயிகள் மற்றும் நம்மை தேர்வு செய்யும் வாக்காளர்கள் ஆகியோரே நமது முக்கியமான இரண்டு கடவுள்களாக விளங்குகின்றனர்.

மாநிலத்தில் ஆளும் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அவர்கள் இருவரையும் மறந்து விட்டனர்.

முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஜன ஆசிர்வாத் யாத்திரை செல்வதற்காக மிகவும் அதிநவீன வசதிகளுடன் கூடிய பேருந்து வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பாஜகவினர் ஏசி கொட்டகைகளில் மட்டுமே உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால், விவசாயிகள் நலனில் அக்கறை கொண்டுள்ள நாங்கள் சாதாரண கொட்டகைகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!