“200 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதமர் டி.எம்.ஜயரத்னாவை உடனடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.
“கடந்த செப்ரெம்பர் மாதம் கொழும்பு, உறுகொடவத்தையில் 200 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் போதைப் பொருள் அடங்கியிருந்த கொள்கலன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. ஆசியாவிலேயே அதிகூடிய அளவில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை விடுவிக்கக்கோரிய சம்பவத்துடன் பிரதமருக்குத் தொடர்புள்ளதாகக் கூறப்படுவதால் அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். இல்லையேல் கைது செய்யப்பட வேண்டும்” என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண.ஓமல்பே சோபிததேரர் தெரிவித்தார்.
பிரதமர் டி.எம்.ஜயரத்ன புத்த சாசன அமைச்சுக்கு தகுதியல்லாதவர் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 200 கிலோவுக்கு மேற்பட்ட ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. ஆனால், கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் மற்றும் அது அடங்கிய கொள்கலன் அடுத்த இரண்டு – மூன்று நாள்களிலேயே விடுவிக்கப்பட்டுவிட்டது. அதுவும் பிரதமரின் செயலாளரே இந்தச் செயலைச் செய்துள்ளார் என்றும் பிரதமர் கூறியதாகத் தெரிவித்தே செயலாளர் இந்த கொள்கலனை விடுவிக்கச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இது சம்மந்தமாக பிரதமர் டி.எம். ஜயரத்னவிடம் கேட்டால், “நான் அவ்வாறு விடுவிக்கச் சொல்லவேயில்லை” என்கிறார். ஆனால், அவரின் செயலாளரோ பிரதமர்தான் ஹெரோயினை உடனடியாக விடுவிக்குமாறு பணித்தார் என்றும் தெரிவிக்கிறார்.
அத்தோடு, இந்தச் சம்பவம் நடைபெற்ற உடனேயே பிரதமர் தனது செயலாளரைப் பதவியிலிருந்து நீக்கியும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற செயற்பாடுகளைப் பார்க்கும்போது பிரதமர், இந்தப் போதைப் பொருளை விடுவித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக எமக்குத் தெரிகிறது.
அது மட்டுமல்லாது, நாட்டில் நடைபெற்ற ஏனைய போதைப் பொருள் சம்பவங்களுடனும் பிரதமருக்குத் தொடர்பிருக்குமோ என்றும் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது நாட்டிற்கே கேடான ஒரு செயற்பாடாகும். இவரை உடனடியாக பதவியிலிருந்து விலக்க வேண்டும். இவரை புத்தசாசன அமைச்சுப் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும். இவ்வமைச்சுப் பதவியை வகிக்க பிரதமர் தகுதியல்லாதவர்.
இவரால் பெளத்த மதத்தின் புனிதத் தன்மையும் கெடுகின்றது. இவரையும், இவரின் செயலாளரையும் உடனடியாக கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். இதற்கு அரசு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
இதேவேளை, ஹெல உறுமயவின் இந்தக் கருத்து தொடர்பில் பிரதமர் ஜயரத்னவுடனும், அவரது செயலாளருடனும் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால், இறுதிவரை அந்த முயற்சி பயனளிக்கவில்லை.
















