நாளை மறுநாள் ரஜினியின் 63-வது பிறந்தநாளைக் கொண்டாட அவரது ரசிகர்கள் பரபரப்பாக தயாராகி வரும் இந்த நேரத்தில் ரஜினியின் வயசு 162 என்ற போஸ்டர் சென்னை நகரம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அதில் கமலுக்கு வயசு 158, ஏ.ஆர்.ரஹ்மானின் வயசு 148, ஷாருக்கானின் வயசு 147 என்று உலக பிரபலங்களின் வயசை தாறுமாறாக குறிப்பிட்ட போஸ்டரை பார்த்ததும் எல்லோருக்குமே குழப்பம் தான். அதேநேரம் அது சாய்ந்தாடு சாய்ந்தாடு என்ற படத்தின் புரமோஷம் போஸ்டர் மட்டும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.
புரமோஷன் என்ற பெயரில் எதற்காக இப்படி ஒரு தாறுமாறான போஸ்டர் என்ற குழப்பத்தை கேள்வியாக்கியபோது சிரித்துக் கொண்டே பதில் சொன்னார் அந்தப் படத்தின் டைரக்டர் கஸாலி.
‘இந்த போஸ்டரில் உள்ள பிரபலங்களுக்கு நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயசுக்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம்மால் வியக்கப்பட்ட இந்த பிரபலங்கள் சராசரி வயதிற்கும் மேல் இன்னும் ஐம்பது ஆண்டுகளோ, அதையும் தாண்டியோ, மாறாத இளமையோடும் உற்சாகத்தோடும் வாழ்ந்தால் அது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?
அப்படியொரு கனவை மெய்யாக்க நினைக்கிற விஷயம் ஒன்றும் படத்தில் இடம்பெறுகிறது. அதை சூசகமாக சொல்லதான் இப்படி ஒரு போஸ்டரை உருவாக்கினோம்’ என்றார்.
கஸாலியின் கனவு நனவானால் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் கூட கொண்டாட்டம்தான்!
















