சிறுபான்மை இனத்தவருக்கு எந்த உரிமைகளும் இல்லை

question-markநாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவருக்கு எந்த உரிமைகளையும் அரசு வழங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஜெ.ஜெனார்த்தனன் குற்றம் சாட்டியுள்ளார்.

சர்வதேச மனித உரிமைகள் தினமான செவ்வாய்க்கிழமை காணாமற்போனோரின் உறவுகள் திருகோணமலை நகரில் நடத்திய கவனவீர்ப்புப் போராட்டத்தின் மீது காடையர் குழு மிலேச்சத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளமை குறித்து கண்டனம் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இந்தச் சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

திருகோணமலை பேருந்து தரிப்பு நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று பேரினவாதிகள் அச்சுறுத்தியுள்ளனர். எனினும் அதற்கு அஞ்சாது தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தபோது, காடையர் குழு தாக்குதலை மேற்கொண்டது.

இந்தத் தாக்குதலை அங்கு கடமையிலிருந்த பொலிஸார் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான முறைப்பாட்டைத் தெரிவிக்க திருகோணமலை பொலிஸ் தலைமைச் செயலகத்துக்கு சென்றிருந்த காணாமற்போனோர் சங்கச் செயலர் மகேந்திரனிடருந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொள்ள பொலிஸ்நிலைய உயர் அதிகாரி மறுப்புத் தெரிவித்து, அவரைஅச்சுறுத்திய பின்னரே முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்டதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் எமது நாட்டில் மனித உரிமைகள் உரிய வகையில் பேணப்படுவதில்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது. கறுப்பின மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடிய நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தவும் அவருக்காக துக்கதினத்தை அனுஷ்டிக்கவும் அரசு மிகுந்த சிரத்தை காட்டுகின்றது.

ஆனால் நமது நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவருக்கு எந்த உரிமைகளையும் வழங்க அரசு தயாராக இல்லை. மக்கள் தமது உரிமைகளுக்காக குரலெழுப்ப முடியாதவர்களாக உள்ளனர் – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply