போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நம்பகரமான விசாரணை வேண்டும். அத்துடன் வடக்கு – கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தினால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
அதனை இலங்கை அரசு செயற்படுத்தாத நிலையில், ஸ்ராஸ்பேர்க்கில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு உடனடியாகவே நிராகரித்துள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை எப்போது நடைமுறைப்படுத்துவது என்பதை இலங்கை அரசே தீர்மானிக்கும் என்று ஊடகத்துறை அமைச்சர் யஹகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை முதன் முதலாக இலங்கை அரசு நடத்தியதை ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர்.
ஆனாலும் இலங்கையில் இன்னமும் இனப்பாகுபாடு மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்வதாகக் கிடைக்கும் அறிக்கைகள் தொடர்பாக அவர்கள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை விட, இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பான விவாதத்தில் பேசிய பிரிட்டன் கொன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜொப்ரிவான் ஓடன், வடக்கிலுள்ள தமிழர்களின் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.
போர் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியுள்ள நிலையில், இரு தரப்பினதும் நடவடிக்கைகளால் தமது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று சுதந்திரமான விசாரணை மூலம் தெரிந்து கொள்ளும் உரிமை இலங்கை மக்களுக்கு இருப்பதாகப் பிரிட்டன் லிபரல் ஜனநாயக கட்சியின் உறுப்பினர் பில் பென்னியன் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர், நம்பகமான விசாரணை, படைக்குறைப்பு, காணிப்பிரச்சினையை தீர்ப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்குதல் உள்ளிட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக, விரைவாக நடைமுறைப்படுத்தவதற்கான முயற்சிகளை இலங்கை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரமானதும் வினைத்திறனானதும் நீதித்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு, கருத்துச் சுதந்திரத்துக்கான வெளிப்பாடு, ஏனைய சமயங்கள் மீதான சகிப்புத்தன்மையின்மையை குறைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று அந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
















