காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நியாயம் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையில் ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளார்.
இந்த ஆணைக்குழுவினால் காணாமல் போனவர்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் காணாமல் போனவர்கள் 10307 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பரணகம தெரிவித்துள்ளார். காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் எவ்வித அச்சமும் இன்றி முறைப்பாடு செய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அச்சுறுத்தல் விடுக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பில் வைத்தியசாலைகளின் ஊடாகவும் தகவல்கள் திரட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடுகளில் எவரேனும் வாழ்ந்து வந்தால் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அந்தத் தகவல்கள் திரட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களின் குடும்பத்தாருக்கு உரிய தகவல்களை வழங்கி, பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதே தமது ஆணைக்குழுவின் நோக்கமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
















