மன்னார் மற்றும் வவுனியாவில் மறைந்த, தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெற்றன.
இன்று (14) காலை 10.30 அளவில், இலங்கை தமிழரசுக் கட்சி இளைஞர் அணியின் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில், மன்னார் நகர சபை மண்டபத்தில் மண்டேலாவின் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) மாவட்ட பொறுப்பாளர் இராசேந்திரம் பற்றிக் வினோ, மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம், உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர் ரெட்னசிங்கம் குமரேஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் இன்று (14) காலை மறைந்த மண்டேலாவிற்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
மண்டேலா நினைவு நிகழ்வு ஏற்பாடுக்குழு ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் மண்டேலாவின் படத்திற்கு மலரஞ்சலி மற்றும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மண்டேலா தொடர்பான உரைகளும் இடம்பெற்றிருந்தன.
இதில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண சபை உறுப்பினர்களான ம. தியாகராசா, ஆர். இந்திரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
















