இளையராஜா ஜீனியஸ்தான். ஆனால் மனிதராக மோசமானவர். எனவே பிரபல இயக்குநர்கள் எல்லாம் அவரை கைவிட்டுவிட்டனர்.
இந்நிலையில் பட வாய்ப்பில்லாமல் இருந்த இளையராஜாவுக்கு, விக்னேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனம் சார்பாக பி.வேலுச்சாமி தயாரிக்கும் “ஒரு ஊர்ல“ என்ற படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
அவ்விழாவில் குப்புறவிழுந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக பேசினார் இளையராஜா…
“ஒரு ஊர்ல படத்தை முழுவதும் பார்த்த பிறகுதான் இசையமைத்தேன். ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக இருந்ததால் என்னால் நிறைவாக இசையமைக்க முடிந்தது. எந்தப் படத்திற்கும் நான் மூன்று நாட்களுக்கு மேல் இசையமைத்தது இல்லை. 100 நாள் படமானாலும், வெள்ளி விழாப்படமானாலும், மூன்று நாட்களுக்கு மேல் என் ஸ்டுடியோவில் அந்த படம் இருந்ததில்லை.
அந்த காலத்திலிருந்தே நிறைய புதுமுக இயக்குநர்களுக்கு எனது பெயர் பயன்பட்டிருக்கிறது. ஒரு சிலர் என்னிடம் வந்து ஏன் அவர்களுக்கு எல்லாம் ஏன் இசை அமைக்கிறீர்கள்? என்று கேட்பார்கள். இசையமைத்து நீ வந்தது மாதிரி அவன் வந்து விட்டு போகட்டுமே. உனக்கு உண்டான இடம் உனக்கு, அவனுக்கு உண்டான இடம் அவனுக்கு – என்பேன் நான்.
புதியவர்களுக்கு என்றுமே நான் இசையமைக்க மறுத்ததில்லை. புதியவர்களே வாருங்கள் நான் இருக்கேன். – என்றார் இளையராஜா.
தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கே.ஆர் பேசினார்…..
“என்னை தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர். என்று சொல்வதை விட இளையராஜா அவர்களின் ரசிகன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை. இளையராஜாவின் பாடல்களை காப்பிரைட் சட்டப்படி சம்பாதித்து இருந்தால் பில்கேட்ஸ் அவர்களைவிட அதிகமாக சம்பாதித்து இருப்பார் இளையராஜா. – என்று சிலாகித்துவிட்டு, “ தமிழ் சினிமாவில் நிறைய தயாரிப்பாளர்கள் நிறைய முதலீட்டில் படங்கள் தயாரிக்கின்றனர் ஆனால் போட்ட பணத்தை எப்படி திருப்பி எடுப்பது என்பது யாருக்கும் புரியவில்லை. அதற்குத்தான் தயாரிப்பாளர் சங்கம் கூடிய விரைவில் முடிவெடுக்க உள்ளது. என்றார் கே.ஆர்
கவிஞர் மூ.மேத்தா, இயக்குநர்கள் பாலு மகேந்திரா, பாலாஜி சக்திவேல், ரத்னகுமார், விஜய்மில்டன், தயாரிப்பாளர் சங்க பொருளாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.
படத்தின் நாயகன் வெங்கடேஷ், கதாநாயகி நேஹா பட்டீல், நான்கடவுள் முரளி, பேபி சௌந்தர்யா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் படத்தின் தயாரிப்பாளர் வேலுச்சாமி வரவேற்றார்.
இயக்குனர் கே.எஸ்.வசந்தகுமார் நன்றி தெரிவித்தார்.
















