இலங்கை நடைபெற்ற இறுதிப் போரின் போது தமிழர்கள் இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இந்திய அரசு பிரேரணை ஒன்றைக் கொண்டுவர வேண்டும். – என்று சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை அறிவாலயத்தில் கட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்தில் பொதுசெயலர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.
இதன்போது 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஈழத் தமிழர் படுகொலை பற்றிய விசாரணையைக் கோரும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானத்தின் விவரம் வருமாறு:
இறுதிப் போரின் போது நிகழ்ந்த தமிழினப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து நம்பகமானதும், சுதந்திரமானதுமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்திய மத்திய அரசு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
அத்தோடு இடைக்கால நிவாரணமாக முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைத்திடும் வகையில், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஈழத் தமிழர்களின் விடிவுக்கு வழிசமைக்க இந்திய அரசு முன்வர வேண்டும்.
இலங்கையில் வடக்கு மாகாணத் தேர்தல் முடிந்து முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் மாகாணக் சபை அமைந்துள்ளது. இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 13வது திருத்தத்தின்படி ஏராளமான அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அந்தத் திருத்தம் இன்னமும் இலங்கையில் ஏட்டுச் சுரைக்காயாகவே இருந்து வருகிறது.
13வது திருத்தத்தின்படி காணி, பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைக்கு கொடுக்காமல் இன்னமும் இலங்கை ஜனாதிபதியே தன்வசம் வைத்திருக்கிறார். மாகாண சபையை அமைத்தல், கலைப்பது ஆகிய அதிகாரங்களும் மஹிந்த வசமே உள்ளன.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுவதும் நீர்த்துப் போன அரசியல் அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே செயற்றிறன் கொண்டதாக 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கேற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய, வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் மற்றும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களிடையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது – என்று குறித்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெனிவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடர் நடைபெறவுள்ள நிலையில் தி.மு.கவின் இந்தத் தீர்மானம் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது.
கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்க கொண்டுவந்த தீர்மானத்தை ஆதரிக்கக்கோரி தமிழகத்தில் மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தியிருந்தனர்.
மாணவர் போராட்டத்தாலும் தமிழக அரசியல் கட்சி அழுத்தங்களாலும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருந்தது. மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக பிரேரணைகள் கொண்டுவரப் படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் முக்கிய கட்சியான தி.மு.கவின் நிலைப்பாட்டையே ஏனைய தமிழகக் கட்சிகளும் கொண்டுள்ளன. இதனால் இம்முறையும் இலங்கைக்கு எதிராகவே இந்தியா செயற்படக் கூடும் என்று அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
















