சனல் 4 விற்கு காணொளி: வழங்கியது அரச தொலைக்காட்சி செய்தியாளர்

channel4இலங்கையின் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பான காணொலிகளை அரச ஊடகங்களே சனல் 4 தொலைக்காட்சி வழங்கியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என அரசாங்கம் கூறினாலும், இந்த உண்மை வெளியில் தெரிந்து விடும் என்பதற்காக வழக்கை தாக்கல் செய்யவில்லை. யுத்தம் நடைபெற்ற போது போர் முன்னரங்க பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பான செய்தி சேகரிப்புகளுக்கு அரச ஊடகங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

தனியார் ஊடகங்களுக்கோ, வெளிநாட்டு ஊடகங்களுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை. போர் குற்றங்கள் தொடர்பான காணொளிகளை அரச ஊடகங்களே இரகசியமான முறையில் வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்தாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

அரச தொலைக்காட்சி ஒன்றின் செய்தியாளர் ஒருவரே சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியதாக அரச தரப்பு தகவல்கள் வெளியிட்டுள்ளது. போர் களத்தில் இருந்தே மற்றைய கமராவில் எடுக்கப்பட்ட காட்சிகளை செய்மதி மூலமாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு விற்பனை செய்துள்ளார்.

அரச தொலைக்காட்சிகள் வெளியிட்ட போர் தொடர்பான காட்சிகள் அதே சமயத்தில் அல்-ஜெசீரா போன்ற ஊடகங்களிலும் வெளியாகின. அந்த காட்சிகள் அரச தொலைக்காட்சிகளில் இருந்து பெறப்பட்டிருந்தால் அவற்றில் அரச தொலைக்காட்சிகளின் இலச்சினை இருந்திருக்க வேண்டும். எனினும் அவற்றில் அரச தொலைக்காட்சிகளின் இலச்சினைகள் இருக்கவில்லை.

இதன் மூலம் அரச தொலைக்காட்சிக்கு அனுப்பிய காட்சிகளின் பிரதிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பது நிரூபணமாகியுள்ளது. இவற்றுடன் மேலும் சில காணொளிகள் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றில் போர் குற்றங்கள் பற்றிய காட்சிகள் இருந்துள்ளன. இது பற்றி அறிந்து கொண்டுள்ள அரசாங்கம் வாயை மூடிக்கொண்டிருக்கின்றது.

அரசாங்கத்தின் ஆட்களே போர் குற்றங்கள் பற்றிய காட்சிகளை சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளனர் என்பதை அறிந்தே அரசாங்கம் வழக்கு தாக்கல் செய்யாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply