சரியான தயார்ப்படுத்தல் இல்லாவிடின் ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடி; எச்சரிக்கிறார் தயான் ஜயதிலக்க

dayanஜெனிவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் சபையின் கூட்டத்துக்கான தயார்ப்படுத்தல்களை இலங்கை முன்னரை விட அதிகமாக மேற்கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இல்லாவிட்டால் பிரதிபலன்கள் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:

ரோம் இணக்கப்பாடுகளில் இலங்கை கையயழுத்திடவில்லை என்பதால் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனச் சிலர் கூறுகின்றனர்.

இவை அறியாமல் கூறும் கதைகள். உலகில் இருப்பது ஒரு சர்வதேச நீதிமன்றம் அல்ல. யூகோஸ்லாவியாவின் முன்னாள் ஜனாதிபதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லை. இதற்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட நீதிமன்றத்துக்கே அவர் கொண்டு செல்லப்பட்டார்.

சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிரதான பணிப்பாளர் மொரோனோ ஒக்கம்போ இலங்கைக்கு எதிரான வழக்குக் கோப்பு ஒன்று ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதேவேளை போர்க்குற்றங்கள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் வெளிப்படையான சுயாதீனமான விசாரணை நடத்தப்படவில்லை என்றால் இலங்கை தொடர்பாக கடுமையான யோசனை முன்வைக்கப்படும் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்திருந்தார்.

இதனைச் சிறிய விடயமாக கருதிவிட முடியாது. கமரூன் கோமாளி அல்ல. அத்துடன் அவர் தனக்கு தெரியாமல் கடிதங்களை எழுதும் செயலாளர்களையும் அதிகாரிகளையும் வைத்திருப்பவர் அல்ல.

இலங்கை தொடர்பில் அவர் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை முன்வைக்கும் போது இது அவரது அரசியல் கெளரவம் தொடர்பான பிரச்சினை.

Tags: ,

Leave a Reply