சர்வதேச நாடுகளை மிரட்டுகின்றது அரசு; இனியும் பொறுக்க முடியாது என்கிறார் மஹிந்த சமரசிங்க

mahinda-samarasingheஇலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க மேற்குலக நாடுகள் இனியும் முயற்சித்தால், அந்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை வெளியிட நேரிடும் என மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் விவகாரத்தில் இலங்கைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சில நாடுகளின் அரசமைப்பில் ஏனைய சமயங்களுக்கு இடமில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

பயாகல பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:

அண்மையில் இங்கு பயணம் செய்திருந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சுதந்திர சதுக்கத்திலுள்ள முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு முன்னால் பெளத்த கொடி இருந்தது எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால், மனித உரிமை விவகாரத்தில் உலகுக்குப் பாடம் புகட்ட முயற்சிக்கும் நோர்வேயில் புரட்டஸ்தாந்து சமயத்தைத் தழுவிய ஒருவர் வேறு சமயத்தைத் தழுவ முடியாது என்பது சட்டரீதியாக உள்ளது.

அமெரிக்காவில் கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் வந்து போதனை நடத்தியதன் பின்னர்தான் காங்கிரஸ் சபையிலும், செனட் சபையிலும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

பிரிட்டிஷ் நாடாளுமன்றில் கிறிஸ்தவ பாதிரியார் வந்து போதனை நடத்தியதன் பின்னர்தான் சபை அமர்வுகள் ஆரம்பிக்கப்படும். இவற்றையெல்லாம் அவர் பார்த்ததில்லை.

ஆனால், எமது நாட்டில் அவ்வாறான நிலைமை இல்லை. நமது நாடாளுமன்றில் அமர்வுகள் ஆரம்பிக்கப்படும்போது பெளத்த சமயத்திற்கு அமையவோ அல்லது வேறு சமயத்துக்கு அமையவோ வழிபாடு நடத்துவதில்லை. ஏனெனில், நாட்டிலுள்ள ஏனைய சமயங்களுக்கும் அரசமைப்பினூடாக நாம் சுதந்திரம் வழங்கியுள்ளோம்.

எனவே, மேற்குலக நாடுகள் எம்மீது இனிமேலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்க முயற்சித்தால் அந்நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த தகவல்களை நாம் எதிர்காலத்தில் வெளியிட நேரிடும் – எனத் தெரிவித்துள்ளார்.

Tags: 

Leave a Reply