ஜெனிவாவில் எதிர்வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் கடும் இராஜதந்திர நெருக்கடிகளை எதிர்நோக்கவுள்ள இலங்கை அரசு, அத்தகைய நெருக்கடிகளைச் சமாளிக்கும் வகையில் விசேட செயற்றிட்ட அறிக்கையொன்றை தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது என அறியமுடிகின்றது.
குறித்த அறிக்கையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விதம், வடமாகாண சபையை நிறுவி அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள், போர்க்கால இழப்பீட்டு தொடர்பில் முன்னெடுக்கப்படும் மதிப்பீட்டு நடவடிக்கை, காணாமற் போனோர் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழு உட்பட முக்கிய பல அம்சங்களை உள்ளடக்குவதற்கு அரச உத்தேசித்துள்ளது.
இந்தச் செயற்றிட்ட அறிக்கையை அடிப்படையாக வைத்தே, மனித உரிமைகள் சபையில் ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்கு தமக்கு மேலும் கால அவகாசம் தேவை என்ற கோரிக்கையையும் இலங்கை தூதுக்குழு விடுக்கவுள்ளது.
இதற்கு சில ஆபிரிக்க நாடுகளும் பச்சைக்கொடி காட்டியுள்ளன என்று தெரியவருகின்றது. எனினும், இது தொடர்பில் அரச தரப்புஇன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவில்லை.
இதற்குப் புறம்பாக ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சும் திட்டங்களை வகுத்துவருகின்றது. யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு பாதுகாப்புத் தரப்பு எட்டு ஆவணப்படங்களைத் தயாரித்துள்ளது.
“இந்த ஆவணப்படங்கள் தற்போது தயாரிக்கப்படவில்லை. முன்கூட்டியே தயாரிக்கப்பட்டுவிட்டன. இதனை இராணுவத்தின் இணையத்தளத்தில் பார்வையிடலாம்” என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரூவான் வணிகசூரிய நேற்று “சுடர் ஒளி’யிடம் தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்துக்கு எதிராக யுத்தக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இறுதி யுத்தகாலத்தில் இராணுவத்தினர் முன்னெடுத்த மனிதாபிமான நடவடிக்கை என்ற தொனியிலேயே இந்த ஆவணப் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், ஜெனிவா தொடர் குறித்து வெளிவிவகார அமைச்சும் பலகோணங்களில் இராஜதந்திர நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதன் ஓர் அங்கமாக இலங்கை இராஜதந்திரிகள் சிலர் வெளிநாடுகளுக்குச் சென்று அங்கத்துவ நாடுகளிடம் பேச்சு நடத்தவுள்ளனர் என்று தெரியவருகிறது.
அதேவேளை, இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வந்திருந்த மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மார்ச் மாத அமர்வின்போது இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.
இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே இலங்கை மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
“மனித உரிமைகள் பேரவையில் இம்முறையும் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படலாம். பொருளாதாரத் தடைவிதிக்கும் அதிகாரம் பாதுகாப்பு சபைக்கே இருக்கின்றது. எனினும், அதில் அங்கம் வகிக்கும் வீட்டோ அதிகாரமுடைய சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இலங்கையுடன் இருப் பதால் பொருளாதாரத் தடை என்பது சாத்தியமாகாது” என்று கூறினார் அரசியல் நிபுணரான கலாநிதி வசந்த பண்டார.
இதற்கிடையில் மனித உரிமைகள் அமைப்புகளும், அரச சார்பற்ற அமைப்புகளும் இலங்கைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்ற பரப்புரையை ஆரம்பித்துள்ளமை அரசுக்கு பெரும் தலையீடாக மாறியுள்ளது.
















