“உடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர்” இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:
அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவ்யானி கோப்ரகடே மீதான அவமரியாதைக் கைது நாட்டு மக்களிடயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இந்தியா கடுமையான பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. அமெரிக்காவுக்கு எதிரான சில கடுமையான நடவடிக்கைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. அதில் முக்கியமானது, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு போடப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புகளை அகற்றுமாறு இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்கர்கள் எப்போதுமே பாதுகாப்பு நடவடிக்கைகளில் மிகவும் உஷாராக, கவனமாக இருப்பார்கள் என்பதால் அதில் இந்தியா கை வைத்துள்ளது. இது அமெரிக்காவை நிச்சயம் தட்டி எழுப்பும் என்று இந்தியா கருதுகிறது.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு பாதுகாப்புக்காக ஏராளமான தடுப்புகள் போடப்பட்டுள்ளன. அமெரிக்க தூதரகமே இதைச் செய்துள்ளது. அவை அத்தனையையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு இந்தியா உத்தரவிட்டுள்ளது. தூதரகங்களுக்கான மது, உணவுக்கு தடை அதேபோல அமெரிக்க தூதரகம், இந்தியாவில் உள்ள பிற துணைத் தூதரகங்களுக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மது வகைகள், உணவுப் பொருட்களுக்கான அனுமதியையும் நிறுத்த இந்தியா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க பள்ளி ஆசிரியர்களின் விசா விவரத்தை சேகரிக்க உத்தரவு அதேபோல இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் விசா, சம்பளம் உள்ளிட்ட விவரங்களை இந்தியாவிடம் சமர்ப்பிக்கவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இந்தியப் பெண் தூதரக அதிகாரியின் உடையை களைந்து அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டனர் – இரு நாடுகளுக்கிடையில் ராஜதந்திர நெருக்கடி:-
விசா மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்தியப் பெண் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடேவின் ஆடையை அவிழ்த்து அதிகாரிகள் சோதனையிட்ட செயல் இரு நாடுகளிடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆடையை அவிழ்த்து சோதனையிட்டது மட்டுமல்லாமல், அவரை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் அமர வைத்தும் அவமானப்படுத்தியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள். நியூயார்க்கில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருப்பவர் தேவயானி. இவர் விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். தனது குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து செல்வதற்காகப் போயிருந்தபோது சாலையில்வைத்து இவரைக் கைது செய்த அதிகாரிகள், கை விலங்கிட்டு அழைத்துச் சென்ற செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த செயலுக்கு வழக்கம் போல கண்டனத்துடன் இந்தியா அமைதி காத்து வருகிறது. கடுமையான எச்சரிக்கையோ அல்லது அதிரடி நடவடிக்கை எதையுமோ இதுவரை இந்தியா எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் இந்திய அளவில் ஏற்பட்டு இருக்கின்றது.
தேவயானியிடம் அமெரிக்க அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைக்கான மாதிரியை எடுத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில்தான் தேவயானியின் ஆடையை அவிழ்த்து அமெரிக்க அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்ட செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவயானி விவகாரத்தைத் தொடர்ந்து, இந்தியா சென்றுள்ள அமெரிக்க எம்.பிக்கள் குழுவை சந்திக்க லோக்சபா சபாநாயகர் மீரா குமாரும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனனும் மறுத்துள்ளனர்.
தேவயானி விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வியன்னா உடன்படிக்கையின் 40வது பிரிவை அமெரிக்கா மீறியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது, கண்டனத்துக்குரியது. தேவயானி ஒரு தூதரக அதிகாரி என்பது தெரிந்தும் கூட இப்படி நடந்து கொண்டுள்ளது வருத்தம் தருகிறது. அதிர்ச்சி அளிக்கிறது. வேண்டும் என்றே அவர்கள் இப்படி நடந்துள்ளனர் என்றனர். 1999ம் ஆண்டு முதல் ஐஎப்எஸ் அதிகாரி தேவயானி. அவர் தூதரக அதிகாரி என்றாலும் கூட அவருக்குப் சட்டப் பாதுகாப்பு சிறப்பு சலுகையைத் தர முடியாது என்று அமெரிக்கா திமிராகப் பேசி வருகிறது. மேலும் உயர் மட்ட அளவிலிருந்து வந்த உத்தரவுப்படியே தாங்கள் நடந்து வருவதாகவும், நியூயார்க் போலீஸார் கூறுகிறார்கள்.
இந்திய பெண் தூதர் கைதுக்கு எதிர்ப்பு.. அமெரிக்க எம்.பிக்களைச் சந்திக்க ராகுல், மோடி மறுப்பு
இந்தியத் துணைத் தூதர் தேவ்யானியை அமெரிக்கப் போலீஸார் அடாவடியாக கைது செய்து, கைவிலங்கிட்டும், ஆடைகளைக் களைந்தும் சோதனை செய்த செயலுக்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று நடப்பதாக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடனான சந்திப்பை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ரத்து செய்து விட்டனர். ஆனால் இந்தக் காரணத்திற்காகத்தான் ரத்து என்று ராகுல் காந்தியும், ஷிண்டேயும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. மாறாக, நாடாளுமன்றப் பணிகளில் பிசியாக இருந்ததால் இவர்கள் சந்திக்கவில்லை என்று அவர்களது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், துணைத் தூதருக்கு ஏற்பட்ட அவமானத்தால்தான் தான் அமெரிக்க குழுவை சந்திக்கவில்லை என்று வெளிப்படையாக மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், நமது நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும், அவர்களுக்குத் துணையாகவும், நமது தூதருக்கு அமெரிக்காவில் நடந்த அவமரியாதைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பை நான் நிராகரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஏற்கனவே இதே குழுவை, இதே காரணத்திற்காக லோக்சபா சபாநாயகர் மீரா குமார் சந்திக்க மறுத்து விட்டார் என்பது நினைவிருக்கலாம். அமெரிக்காவிலிருந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜார்ஜ் ஹோல்டிங், பீட் ஓல்சன், டேவிட் ஸ்க்வீகெர்ட், ராபர்ட் உடால், மெடலின் போர்டெல்லா ஆகியோர் அடங்கிய எம்.பிக்கள் குழு டெல்லி சென்றுள்ளது. இந்தக் குழுவைச் சந்திக்கத்தான் இந்தியத் தலைவர்கள் மறுத்துள்ளனர். அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு தனது அரசு வழங்கிய அடையாள அட்டைகளை திருப்பி அளிக்குமாறு இந்திய அரசு, அமெரிக்காவைக் கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.
















