கடுமையான பிரேரணை இலங்கை அரசின் மீது; மார்ச் மாதத்தில் ஜெனிவா மாநாட்டில் கொண்டுவர சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் தீவிர பரப்புரை

un-flagஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஏற்கனவே இரண்டு தடவைகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றத் தவறியதால் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக மிகவும் கடுமையான பிரேரணையை நிறைவேற்றுமாறு உலக நாடுகளை வலியுறுத்தி தீவிர பரப்புரைகள் தற்போதே முடுக்கிவிடப்பட்டுள்ளன.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுமே இந்தப் பரப்புரைகளில் இறங்கியுள்ளன எனத் தெரியவருகின்றது.

இதற்கு ஆதரவாக இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகளும், அரசசார்பற்ற நிறுவனங்களும் தகவல்களைத் திரட்டி வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

இதன் முன்னோடியாக சர்வதேச மனித உரிமைகள் தினமான கடந்த 10ஆம் திகதி திருகோணமலை நகரில், காணாமற்போனோருக்கு நீதிவேண்டி அவர்களின் உறவினர்கள் நடத்திய கவனவீர்ப்புப் போராட்டத்தின் மீது இராணுவப் புலனாய்வாளர்கள் உள்ளிட்ட காடையர்கள் நடத்திய காட்டு மிராண்டித்தனமான தாக்குதலின் புகைப்படங்கள், காணொலிகள் ஆகியவற்றை இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகள் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு அனுப்பிவைக்கவுள்ளன எனத் தெரியவருகின்றது.

அதேவேளை, பொதுநலவாய மாநாட்டுக்காக கொழும்பு வந்து யாழ்ப்பாணம் சென்ற பிரிட்டிஷ் பிரதமரைச் சந்திப்பதற்காக கடந்த மாதம் 15ஆம் திகதி யாழ். பொது நூலகத்திற்கு முன்னால் அணிதிரண்டு நின்ற காணாமல்போனோரின் உறவினர்கள், மதகுருமார்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் மீது பொலிஸார் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதலின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.

அத்துடன், அண்மையில் சிறிகொத்தாவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மனித உரிமைக் கண்காட்சி மீது காடையர்கள் நடத்திய தாக்குதலின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகளால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகின்றது.

இதேவேளை, அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பெயானி மற்றும் அமரிக்காவின் உயர் குழுவினர் ஆகியோர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும், தமிழ் சிவில் சமூகத்தினரையும் நேரடியாகச் சந்தித்து தகவல்களைத் திரட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

அதுமட்டுமன்றி, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுயாதீன விசாரணையை இலங்கை அரசு நடத்தாவிட்டால் சர்வதேச விசாரணையைக் கோருவோம் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஐ.நா. அதிகாரிகள், பிரிட்டிஷ் பிரதமர், கனேடியப் பிரதமர் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் உள்ளிட்ட சர்வதேச தலைவர்களும், பிரதிநிதிகளும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், சர்வதேச சமூகத்தினரின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் இலங்கை அரசு, தன்னிச்சையாகச் செயற்பட்டுவருகின்றது என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்து வருகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக கடுமையான பிரேரணையை சர்வதேச நாடுகள் நிறைவேற்றுவது உறுதியாகியுள்ளது என்று சர்வதேச இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

Tags: , ,

Leave a Reply