தமிழர்களின் ஒத்துழைப்பு இன்றி தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது; நாடாளுமன்றில் அமைச்சர் வாசு எடுத்துக்காட்டு

vasudeva_nanayakkaraதமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது என நேற்று சபையில் சுட்டிக் காட்டிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தமிழர் ஒருவருக்கு சிங்களமொழியில் மாத்திரம் கடிதம் எழுதுவது கத்தியால் குத்தும் செயல் போன்றது என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

2013ஆம் ஆண்டில் 35 ஆயிரம் அரச ஊழியர்களுக்கு மொழிப்பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கு சிங்களமொழியும், சிங்களவர்களுக்குத் தமிழ்மொழியும் பயிற்சியாக வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச அறிவித்தல் பலகைகள், அதனால் வழங்கப்படும் கையேடுகள் போன்றவற்றில் இரு மொழிகளும் கட்டாயம் இருக்க வேண்டும்.

எனினும், முழுமையாக சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ்மொழியிலும், முழுமையாக தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்களமொழியிலும் கருமங்களை முன்னெடுத்துச் சொல்வது பொருந்தாது. அவற்றுக்கு நிதி செலவழிப்பதும் வீண்விரயமாகும். கொழும்புக்கு மும்மொழிக்கொள்கை அவசியமாகும்.

நாம் அழைப்பு நிலையமொன்றை அமைத்துள்ளோம். பயனாளிகளுக்குத் தங்களுடைய மொழியில் சேவையைப் பெறமுடியாவிட்டால், 1956 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி எங்களின் கவனத்துக்குக் கொண்டுவரலாம்.

அவ்வாறு எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அழைப்பை ஏற்படுத்தி நாம் அறிவுறுத்தல்களை வழங்குவோம். பின்னர் குறித்த பயனாளிக்கு உரிய சேவை கிடைத்ததா என நாம் அவரிடமும் வினவுவோம்.

அதேவேளை, அரச நிறுவனங்களில் மொழிபெயர்ப்பு வசதி இருக்கவேண்டும். ஏனெனில், தமிழ் மட்டும் தெரிந்த ஒருவருக்கு சிங்களத்தில் மாத்திரமும், அதேபோன்று சிங்களவருக்கு தமிழில் மாத்திரமும் கடிதம் எழுதுவது கத்தியால் குத்தும் செயல் போன்றதாகும்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் பிரதேச மட்டங்களில் மொழி விவகாரங்களைக் கையாள்வதற்கு எமது அமைச்சின் கிளைகள் அமைக்ககப்படும். 2014இல் கிளிநொச்சியில் கிளையயான்று திறக்கப்படும்.

குறிப்பாக, இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அரசியல் தீர்வு அவசியமாகும். வடமாகாணசபை நிறுவப்பட்ட பின்னர் முதல்வர், ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார்.

இவ்வாறான நல்லிணக்கப் பணிகள் தற்போது முடக்கமடைந்துள்ளன. பிரச்சினைகளைப் பேசித் தீர்த்து சுமுகமாகப் பயணிக்கவேண்டும்.

இறுதியாக ஒன்றைக் கூறுகின்றேன். சிங்கள மக்களின் ஒத்துழைப்பு – இணக்கப்பாடு இல்லாமல் தமிழர்களின் அரசியல் உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது. அதேபோன்று தமிழர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் தேசிய ஒருமைப்பாட்டை ஏற்படுத்த முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார கூறினார்.

Tags: , ,

Leave a Reply