இனி இந்தியாவில் கள்ளக் காதல் குற்றமில்லை ; இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆண் பெண் இடையிலான தகாத உறவு குற்றம் அல்ல என்றும், இதில் தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு 497 அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருமணம் ஆன ஆண்-பெண் இடையேயான கள்ள உறவில் ஆணுக்கு மட்டும் தண்டனை விதிக்க வகை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவுக்கு எதிராக ஜோசப் ஷைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சட்டப்பிரிவு செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வந்தது. கடந்த மாதம் 8 ஆம் திகதியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் தகாத உறவு குற்றம் அல்ல என பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

‘திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றம் அல்ல. மனைவிக்கு கணவர் எஜமானர் அல்ல. திருமணத்தை தாண்டி தகாத உறவில் ஈடுபடும் ஆண்களை மட்டுமே தண்டிக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது’ என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

தகாத உறவில் ஈடுபடும் ஆண், பெண் இருவரையும் தண்டிக்க முடியாது. பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு. தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வரை அது சட்டவிரோத குற்றம் இல்லை என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!