“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசு தடை செய்ய வேண்டும். வடக்கில் கூட்டமைப்பு ஆட்சியிலிருக்கும் வரை அங்கிருந்து இராணுவத்தை அகற்றவே கூடாது” என்று நாடாளுமன்றில் நேற்று வலியுறுத்தினார் பிரதியமைச்சர் சரத் வீரசேகர.
புலிகளை அழித்த கையோடு கூட்டமைப்பையும் தடை செய்யாதது தாம் விட்ட தவறு என்றும் முன்னாள் போராளிகளைப் போல் இவர்களையும் கைதுசெய்து புனர்வாழ்வு அளித்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று நடை பெற்ற தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட அமைச்சுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரபாகரனைத் “தேசிய வீரன்’ என்று கூட்டமைப்பு நாடாளு மன்ற உறுப்பினர் ஒருவர் இந்தச் சபையில் பேசுகின்றார். குறிப்பாக, ஹிட்லர் அழிக்கப்பட்ட பின்னர் நாசி கட்சி தடை செய்யப்பட்டது.
எகிப்தில் முபாரக்கின் கட்சியும் தடைசெய்யப்பட்டது. புலிகளை அழித்த கையோடு நாமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
போர் முடிவடைந்த பின்னர் முன்னாள் போராளிகளுக்குப் புனர்வாழ்வளிக்கப்பட்டது போல் இவர்களையும் கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தி புனர்வாழ்வு அளித்திருக்க வேண்டும்.
பயங்கரவாதத்துக்கு துணைபோக மாட்டார்கள் என்றும், ஈழம் அமைக்க முயற்சிக்கமாட்டார்கள் என்றும் கூட்டமைப் பிடம் அரசு அறிவிப்பொன்றை பெற வேண்டும். இல்லையேல், அக்கட்சியைத் தடைசெய்ய வேண்டும்.
யாழிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு கூட்டமைப்பு கோருகின்றது. இன்று மேற்குலகில் புலி செயற்பாட்டாளர்கள் இருக்கின்றனர். தமிழ் நாட்டிலும் புலி ஆதரவாளர்கள் செயற்படுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பிரிவினைவாதக் கொள்கையை முன்னெடுக்கிறது. எனவே, அக்கட்சியின் ஆட்சி இருக்கும்வரை வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது. அவ்வாறு அகற்றுவதானது ஈழத்துக்கு வழியமைக்கும் செயலாகும் என்றார்.
















